13013 ஊசி இலை (அரையாண்டிதழ்): துளிர் 1, மார்கழி 2003.

ச.கலைச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்), ஏ.ஜி.யோகராஜா, லா.சண்முகராஜா, கு.சுரேஷ்குமார் (ஆசிரியர் குழு). சுவிட்சர்லாந்து: ஊசி இலை, தமிழ் மன்றம், கலைப் பிரிவு, லுட்சேர்ன், Postfach 12002, 6000 Luzern, 1வது பதிப்பு, மார்கழி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).
104 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: சுவிஸ் பிராங் 5., அளவு: 22×16.5 சமீ.

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் தமிழ் மன்றத்தின் பன்னிரண்டு ஆண்டுகால சேவைகளின் முதிர்ச்சியின் அறுவடையாக இந்த அரையாண்டிதழ் தொடங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து தேசத்தின் காட்சிப் படிமத்தை எமக்கு அதிகமாகப் பிரதிநிதிப்படுத்துவது அந்நாட்டின் ஊசி இலைக்காடுகளாகும். இதையே எமது புகலிடத்துத் தமிழ் இனத்தின் புலத்தில் இருப்பின் பிரதியீடாகக் கற்பனைசெய்து இம்மலரினை ஊசிஇலை என்று பொருத்தமாகப் பெயரிட்டுமுள்ளனர். வயது வேறுபாடின்றி பல்வேறு தரத்தினரது ஆக்கங்களையும் இம்முதலாவது இதழிலேயே இடம்பெறச் செய்துள்ளனர். இவ்விதழின் ஆரம்பமே 12 வயது ஜெஸ்மின் என்ற சிறுமியின் முற்றத்து மல்லிகையே என்ற கவிதையாக மலர்கின்றது. பெற்றோர்கள், ஆசிரியர், இளம்தலைமுறை உறவுகளின் அறிவியல், மற்றும் துறைசார், இலக்கியத்தேவையினை ஒரே இதழில் வழங்குவதன்மூலம் படைப்பிலக்கியத் தேவையை சிறிதளவாவது ஈடுசெய்யும் வகையில் ஊசிஇலை வெளியிடப்பட்டுள்ளது. புகலிடத்தில் சிறுவர் உளவியல் நலம்பேணல், பெற்றோரியம், இளையோர் சமூக நடத்தைகளின் போக்கு என்பன தொடர்பான கட்டுரைகளுடன், சிறுகதைகள், கவிதைகள், இளையோரின் வண்ண ஓவியப் படைப்புக்கள் என்று பரவலான அம்சங்கள் நிறைந்து காணப்படும் ஊசியிலை, தனித்துவமான இளையோருக்கான புகலிட இலக்கியத் தளமொன்றின் அமைவுக்கு நம்பிக்கைதரும் வகையில் அமைந்திருக்கின்றது. கதைகளிலும், கவிதைகளிலும் இடைக்கிடையே காணப்படும் அன்னியமொழிப் பதப்பிரயோகத்திற்கான தமிழ்மொழிபெயர்ப்பும் உரிய இடங்களில் காணப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10314cc).

ஏனைய பதிவுகள்