மலர்ஆசிரியர் குழு. கிளிநொச்சி: ஈழநாதம் அலுவலகம், 1வது பதிப்பு, 1994. (கிளிநொச்சி: சந்திரன் பதிப்பகம்).
165 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 150.00, அளவு: 23.5×18 சமீ.
ஈழநாதம் நாளிதழ் 19.02.1990 யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தனது வன்னிப்பதிப்பை 1993இல் தொடங்கியது. தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த துன்பங்களை உடனுக்குடன் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியது. 1995 ஆம் ஆண்டு சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கு மிடையிலான யுத்தத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் இருந்து முற்றாக இடம்பெயர்ந்து சாவகச்சேரி கல்வயல் பகுதியில் இயங்கிவந்தது. பின்னர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்திருந்த ஈழநாதம் 1996 ஆம் ஆண்டு கிளிநொச்சியை நோக்கிய சத்ஜெய இராணுவ நடவடிக்கையினால் பழைய முறிகண்டிப் பகுதிக்கும் பின்னர் கரிப்பட்ட முறிப்புக்கும், புதுக்குடியிருப்புக்குமாக மாறி மாறி இடம்பெயர்ந்திருந்தது. 2002 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் கிளிநொச்சியில் இயங்கி வந்த இப்பத்திரிகை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களிலும் வெளிவந்திருந்தது. 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 11 ஆம் திகதிக்குப் பின்னர் வன்னிப்பகுதியில் மட்டுமே வெளிவந்திருந்தது. 10.05.2009இல் முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் இப்பத்திரிகை நின்றுபோனது. வன்னிப் பதிப்பிற்கான முதலாம் ஆண்டுமலரில் பிரம்மஞானி (கருத்துலகமும் வாழ்வியக்கமும்), முல்லைமணி (கயிலைப்பிள்ளை வன்னியனார்), க.சரவணபவன் (வன்னிவள நாட்டார் வழக்கியல்), எம்.எஸ்.பத்மநாதன் (வன்னியில் ஐயனார் வழிபாடு), சி.கணேசமூர்த்தி (மனிதவளம்: ஒரு ஆய்வுநோக்கு), ச.முருகானந்தன் (வன்னி மண்ணில் கலை இலக்கிய வளர்ச்சி), ஜெசிந்தா (நவீன நாடகமும் மன்னார் மாவட்டமும்), எஸ்.சிவராஜா (முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆற்றுநீர் வளம்), அ.கேதீஸ்வரன் (ஈழநாதம் வன்னிப் பதிப்பும் தேசிய விடுதலைப் போராட்டப் பங்களிப்பும்), பெ.கணேசன் (ஈழநாதம் வன்னிப் பதிப்பின் இலக்கியப்பணி), கை.செல்லத்துரை (வேழம் படுத்த வீராங்கனை), நா.யோகேந்திரநாதன் (மன்னார் மாவட்டத்தில் நாட்டுக்கூத்து) ஆகியோரின் கட்டுரைகளும், கருணா (வெளிநோக்கும் சிறுதடம்), வன்னியன் (தமிழீழம் எங்களின் தாய்வீடு), சிவஜெயா (அழிவென்பது இல்லை), கனகாம்பிகை கதிர்காமன் (தமிழினத்தின் உறுதுணையாக அலைகடலில் காவல் கொண்டோம்), நிலா தமிழின்பதாசன் (தாயின் ஆசையும் ஏக்கமும் தணிப்பனோ?), விவேக் (காடுகள் காத்திருக்கின்றன), க.கணேசலிங்கம் (எம்மண்ணில் எங்கும் விளையும்), நாவண்ணன் (கூத்தாடுவோம் தமிழா), சோ.பத்மநாதன் (ஜோஹனெஸ்பேர்க் நகரம்)ஆகியோரின் கவிதைகளும், யோ.மைதிலியின் ‘ஒளிக்கீற்றுகள்” நாடகமும், மு.நடராஜ பகவதரின் நேர்காணலும் செ.பொ.சிவனேசு (புதல்வனுக்கு அழைப்பு), விவேக் (கிராமத்தின் இரவுகள்), தாமரைச்செல்வி (ஊன்றுகோல்), அங்கதன் (மனவுறுதி), முருகேசு (நிசங்கள்), செம்மலையூரான் (கானல் அல்ல), வசந்தன் (பிணைப்பு) ஆகியோரின் சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 018539).