“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது யாழ் மக்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி. இந்தத் திரவியத்தைத் தேடுவதே கல்வியின் இலக்கு என்கின்ற சிந்தனைப் போக்கு தமிழர்கள் மத்தியில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. திரவியத்தைத் தேடுவதற்கு உதவாத கல்வி சமூக அங்கிகாரத்தை பெறத் தவறுகின்றது. அறிவு பற்றிய இந்தக் குறுகிய பார்வை காரணமக தமிழ் சமூகத்தின் மத்தியில் துறைசார் நிபுணர்களின் உருவாக்கம் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது அல்லது இல்லை. அவ்வாறான துறைசார் நிபுணத்துவம் உடையவர்கள் கூட சமூக அங்கிகாரத்தைப் பெறாமையினால் அவர்கள் அடுத்த தலைறையினருக்கு ஒரு முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக வர முடியாது போய்விடுகின்றது.
அறிவு பற்றிய இந்தக் குறுகிய பார்வை தற்போது தமிழ் சமூகத்தின் பல்வேறு அம்சங்களையும் பாதிக்கின்றது. குறிப்பாக தமிழ் சமூகத்தின் – யாழ் சமூகத்தின் திரவியம் தேடுவதற்கான கல்வியையும் இது பாதித்துள்ளது. தமிழ் பகுதிகளில் பணியாற்ற மருத்துவர்கள் இல்லாததால் ஆதார வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது. மருத்துவ தாதிகள் பற்றாக்குறையாக உள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளது, முதல்தர பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு தகுதி வாய்ந்த தமிழ் அதிபர்கள் இல்லை. இவை தமிழ் சமூகத்தின் அறிவு நிலையின் சில வெளிப்பாடுகள் மட்டுமே.
தமிழ் சமூகம் சிறந்த சிந்தனையாளர்களை, சிறந்த தலைவர்களை, சிறந்த படைப்பாளிகளை, ….. உருவாக்கத் தவறியுள்ளது. அல்லது அவ்வாறானவர்களை முன்மாதிரிகளாக்கத் தவறிவிட்டது. இதன் விளைவாக பணமே வளர்ச்சியின் அளவுகோலாகி நிற்கின்ற நிலையேற்பட்டு உள்ளது. அந்த பணத்தினைக் கொண்டு சமூக அந்தஸ்தை வாங்கிக் கொள்ளலாம் என்று குறுக்கு வழிகளில் பலர் ஈடுபட்டு உள்ளனர். உலகத் தமிழ் மாநாடுகள், சைவ மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படுவது, சம்பந்தா சம்பந்தம் அற்றவர்கள் நிகழ்வுகளுக்கு பிரமுகர்களாக அழைக்கப்படுவது, கௌரவிக்கப்படுவது, ஊடகங்கள் பணம் படைத்தவர்களால் கொள்வனவு செய்யப்படுவது என்பன பணத்தினைக் கொண்டு சமூக அந்தஸ்தை வாங்குவதன் வெளிப்பாடுகளே.
மறுபக்கத்தில் குறுகிய எல்லைகளுக்குள் தங்களைக் குறுக்கிக் கொண்ட படைப்பாளிகள், இலக்கிய கர்த்தாக்கள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள், குறும்பட இயக்குநர்கள், கல்வியியலாளர்கள் எனப் பல துறைசார்ந்தவர்கள் ஒரு குறுகிய வட்டத்தினுள் இயங்கிக் கொண்டுள்ளனர். இவர்கள் தங்கள் தங்கள் வட்டத்தினுள்ளே உள்ளவர்களை பாராட்டுவதும், கௌரவிப்பதும், அவர்கள் பற்றி எழுதிக்கொள்வதுமான ஒரு குறுகிய எல்லைக்குள் தங்களை குறுக்கி வைத்துள்ளனர். இவர்களுக்கு ஆக்கங்களின் படைப்புகளின் தரம் என்பதிலும் பார்க்க அதனை ஆக்கியவரின், படைத்தவரின் தனிப்பட்ட உறவு, நட்பு தான் முக்கியத்துவம் பெறுகின்றது. அதனால் தான் ஒரு புத்தகத்தைக் கூட முழுமையாகப் படித்திராத, ஒரு படைப்பையும் உருவாக்கி இராத ஓருவருக்குக் கூட இவர்களால் இலக்கிய கர்த்தா என்ற விருதை வழங்க முடிகிறது. இவ்வாறான பல பத்து வட்டங்கள் உருவாகுவதும் தங்கள் தங்கள் எல்லைகளைத் தாண்டாமலேயே காணாமல் போவதும் இயல்பானது.
அது மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்திடம் உள்ள மற்றுமொரு குறைபாடு அவர்கள் வரலாறுகளை ஆவணங்களைப் பேணுவதில் ஆர்வம் அற்றவர்களாகவும் அக்கறையற்றவர்களாகவும் இருப்பது. ஆறுமுக நாவலரைக் கொண்டாடுபவர்களிடம் ஆறுமுகநாவலரின் ஒரு புகைப்படம் இல்லை. ஓவியர் ஒருவர் வரைந்த ஒரு படமே ஆறுமுகநாவலராக இன்று அறியப்பட்டு உள்ளது. இதே போன்று இலங்கை கொம்யுனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தவர் என் சண்முகதாசன். தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்ற சாதியப் போராட்டங்களை முன்னெடுத்தவர்களில் ஒருவர். இவர் சில பத்து ஆண்டுகளுக்கு முன் மறைந்த போது அவருடைய ஒரு புகைப்படம் கிடைக்கவில்லை. மறைந்த என் சண்முகதாசனை காட்டுகின்ற படம் ஒரு ஓவியரின் கைவண்ணமே. சம காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதே மிகக் கடினமான ஒரு விடயமாக இருக்கின்ற சூழலில் சில பத்து ஆண்டுகள், சில நூறு ஆண்டுகளைத் தாண்டிச் சென்று எமது வரலாறுகளைத் தேடுவது என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
சமூகமே மனிதனை அவனுடைய சிந்தனையை செயற்பாடுகளை தீர்மானிக்கின்றது என்கிறது சோசலிசம். ஆனால் தமிழ் சமூகத்தின் பொதுச் சிந்தனைக் கட்டமைப்புக்குள் உருவாகி, வளர்ந்து அப்பொதுச் சிந்தனைக் கட்டமைப்பை உடைத்து வெளியே வந்த சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்களில் நூலகவியலாளர் என் செல்வராஜா குறிப்பிடத்தக்கவர் என்றால் அது மிகையல்ல. தனி மனித ஆளுமை சமூகத்தின் மீது மிகுந்த செல்வாக்குச் செலுத்தக் கூடியது என்பதை அவர் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். தனி மரமாக நின்று விழுதுகளை விட்டு தோப்பை உருவாக்கி உள்ளார்.
பாடப் புத்தகங்களைத் தவிர வேறு நூல்களை வாசிப்பதை வீண் விரயம் என்று நினைக்கின்ற சமூகத்தில் பிறந்து, வாசிப்புத் தன்மை வீழ்ச்சி அடைந்து செல்கின்ற அல்லது வாசிப்புத் தன்மையற்ற சமூகத்தில் வாழ்ந்து 10,000 நூல்களை தேடிப் பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ள நூலகவியலாளர் என் செல்வராஜா நூலகவியலில் ஈடு இணையற்ற ஒரு உன்னதமான செயற்பாட்டாளன். பொருள் தேடுவதற்கு, பணம் தேடுவதற்கு உதவாத கல்வியில் நூலகவியலும் ஒன்று. அத்துறையில் சேர்ந்து கற்றதோடு நின்றுவிடாமல் கற்றதை நடைமுறையிலும் சாதித்துக் காட்டி வருகின்றமை அவரின் தனித்துவம்.
நூலகவியல் கற்கையை மேற்கொள்கின்ற மாணவர்கள் பெரும்பாலும் நூலகர்களாக வந்து நூலகரின் ஆசனத்தில் உட்கார்ந்து இளைப்பாறுவதுடன் அவர்களது வாழ்க்கை வட்டம் பூர்த்தியாகிவிடும். ஆனால் செல்வராஜா இந்தக் குறுகிய வாழ்க்கை வட்டத்திற்குள் தன்னை அடைத்துக்கொள்ளவில்லை. அவருடைய ஆர்வமும், தேடலும், சமூக அக்கறையும் அவரை தமிழ் நூலகவியலின் முன்னோடி ஆக்கியுள்ளது.
நூல்களை வாசகனுக்கு வழங்குகின்ற அடிப்படைச் செயற்பாட்டுடன் சர்வதேச அளவில் புக்அப்ரோட் நிறுவனத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் சிறுவர்களுக்கான ஆங்கில நூல்களைத் தருவித்து தமிழ் பகுதிகளில் உள்ள பாடசாலை நூலகங்கள் மற்றும் கிராமிய நூலகங்களுக்கு வழங்கினார். நூல்கள் தொடர்ச்சியாக வருவதற்கு எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி, வெளியீட்டுத்துறை செயலிழந்து விடாமல் வெளியீடுகளை கொள்வனவு செய்து, அதற்கு புகலிடத்தில் புத்தகச் சந்தையை அறிமுகப்படுத்தி ஈழத்து நூல்களுக்கான சந்தையை அறிமுகப்படுத்தினார்.
நூலக நடவடிக்கைக்கு அப்பால் ஒரு எழுத்தாளனாக, எழுத வைப்பவனாக, ஒரு வெளியீட்டாளனாக, ஒரு விநியோகஸ்தனாக, ஊடகங்களில் நூல்களை அறிமுகப்படுத்துபவனாக, ஆவணக் காப்பாளனாக, வாசகனாக, விமர்சகனாக ஒரு நூல் உருவாக்கப்பட்டு வாசகனிடம் சேர்க்கப்படும் வரையான அனைத்து செயற்பாட்டிலும் என் செல்வராஜாவின் பார்வை இருந்திருக்கும். ஈழத்தமிழர் ஒருவரின் நூல், உலகின் எப்பாகத்தில் வெளியிடப்பட்டாலும் அந்நூல் என் செல்வராஜாவின் ஸ்கானிங் க்கு வந்தேயாக வேண்டும். இது தவிர்க்க முடியாதது. இந்த வகையில் என் செல்வராஜா ஒரு பல்தேசிய நிறுவனம் என்றும் கொள்ளலாம்.
நானும் செல்வராஜா குடும்பத்தினரும் ஒரே காலத்தில் 1991இல் லண்டனுக்கு புலம்பெயர்ந்தோம். ஆனால் 1997இல் தேசம் சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவரும்வரை எமக்குள் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. தேசம் சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்ததும் எமக்கு இரு சந்தாக்கள் முதன் முதலில் வந்தது. ஒன்று என் செல்வராஜாவிடம் இருந்தும் மற்றையது அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கத்திடம் இருந்தும் வந்தன.
அப்போது செல்வராஜாவுடன் ஆரம்பித்த அறிமுகம் நட்பாக, குடும்ப நட்பாக, குடும்பத்தில் ஒருவனாக, தந்தையும் மகனுமாக மலர்ந்தது. இந்த உறவின் அடித்தளம் நூல்கள். நூலகம் அவருடைய வாழ்க்கை முறை. நூலும் நூலகமும் இல்லாமல் என் செல்வராஜா என்றொரு மனிதன் இல்லை. செல்வராஜாவின் அடையாளம் நூலும் நூலகமும். அவருடன் மிக நெருங்கிப் பழகியவன் என்ற வகையில் அவருடைய கனவும் அதுவே என்பதை அறிவேன்.
இதுவே அவரின் வெற்றியின் இரகசியம். தனது இலக்கு எதுவென்பதை மிகத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு, அந்த இலக்கு நோக்கிய பயணத்தை தனது வாழ்க்கை முறையாக்கி, இலக்கை அடைவதை கனவு காண்பவன் அந்த இலக்கை அடைந்தே தீருவான். செல்வராஜா தனது இலக்கினை – தமிழ் சமூகத்தின் இலக்கினை தனது அறுபது வயதினுள் தனியொருவனாக பெரும்பாலும் அடைந்துவிட்டார். அவருடைய இலக்கில் இருந்து பயணத்தைத் தொடருவது சமூகத்தின் பொறுப்பு.
செல்வராஜாவின் இலக்கை அடைவதற்கான நீண்ட பயணத்தில் அவருடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவருடைய வெற்றியில் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. தமிழ் சமூகத்தில் பொதுவாழ்க்கையில் குறிப்பாக பொருளாதார நலனை, சமூக அந்தஸ்தை தராத விடயங்களில் அதில் ஈடுபாடுடையவருக்கு அக்குடும்பங்கள் தங்கள் ஆதரவை வழங்குவதில்லை. மாறாக செல்வராஜாவுக்கு அவருடைய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவருடைய செயற்பாடுகளுக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்கி அவருடைய இலக்கு நோக்கிய பயணத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
நான் ஈடுபாடுகொண்ட ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற தேசம் சஞ்சிகை, தேசம்நெற் இணையம், தேசம் பத்திரிகை ஆகிய ஊடகங்களுக்கும் செல்வராஜாவுக்கும் உறவும் முரணும் உள்ளது. தேசம் தமிழ் தேசியம் பற்றிய மிகக் கடுமையான விமர்சனம் உள்ள ஊடகம். ஆனால் என் செல்வராஜா தமிழ் தேசிய ஊடகங்களுடாக நன்கு அறிமுகமானவர். ஆனாலும் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அக்கருத்தை சொல்வதற்கான, வெளியிடுவதற்கான உரிமைக்கு ஆதரவாக அவர் எப்போதும் இருந்துள்ளார். தேசம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் என் செல்வராஜா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய நூல் தேட்டத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 10,000 வரையான நூல்களில் எவ்விதமான தரப்படுத்தலோ, எவ்விதமான பாகுபாடோ காட்டப்பட்டிருக்கவில்லை. விஞ்ஞான ரீதியிலான சர்வதேச நூல் பகுப்பு செய்முறையூடாக மட்டுமே நூல்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இது செல்வராஜாவின் தனித்துவத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றே நினைக்கிறேன். அவர் நூல்கள், நூலகம் தவிர்ந்த எந்தவொரு அரசியல் மற்றும் குழுக்களுடன் தன்னை அடையாளம் காட்டுவதில்லை என்பதில் மிகத் தெளிவாக இருந்துள்ளார்.
செல்வராஜா எப்போதுமே ஒரு செயற்பாட்டாளர். எண்ணுவதை, பேசுவதை செயல்படுத்த வேண்டும் என்ற துடிப்புடையவர். அதனைச் செயற்படுத்துவதற்காக கட்டளை பிறப்பித்துவிட்டு இருப்பவரல்ல. மற்றவர்களுடனும் கலந்துரையாடி செயற்பாடுகளைச் செழுமைப்படுத்துவார். தனக்கு வயதில் குறைந்தவர்கள் என்றாலும் அனுபவத்தில் குறைந்தவர்கள் என்றாலும் அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களைப் பெற்றுக்கொள்ளவும் அவர்களுடைய கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவும் அவர் ஒரு போதும் தயங்கியவரல்ல. அதனால் அவருக்கு மிக இளையவர்களிடமும் நட்பும் உறவும் உண்டு.
தேசம் சஞ்சிகையில் அவர் ஆசிரியராக இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன அதனைச் செழுமைப்படுத்துவதில் அவருடைய ஒத்துழைப்பு என்றும் இருக்கும். அவ்வாறே தேசம்நெற் இணையத்துக்கும். தேசம் பத்திரிகைக்கும். மேலும் விவாதங்களை அவர் ஒரு போதும் தனிநபர் சார்ந்தநிலையில் பார்ப்பதில்லை. அதனால் செல்வராஜாவின் பல்வேறு செயற்பாடுகளில் தேசம் பங்கெடுத்துள்ளது.
யாழ் நூலக வரலாற்று தொகுப்பு, யாழ் பொது நூலகத்துக்கு புக் அப்ரோட் புத்தகங்களை அனுப்பி வைக்க, யாழ் பொது நூலகத்தில் புலம்பெயர் எழுத்துக்களுக்கான பகுதியை உருவாக்க, யாழ் நூலகத்துக்கான பகுப்பாக்கம் செய்யும் வழிகாட்டியை கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக்கொடுக்க என்று என் செல்வராஜா முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு தேசம் அனுசரணையாளராகச் செயற்பட்டது.
என் செல்வராஜாவின் தூண்டுதலினால் தேசம் வெளியீட்டகம் உருவாக்கப்பட்டு சில நூல்கள் வெளியிடப்பட்டன. அதில் யாழ் பொது நூலக ஆங்கில வரலாற்றுத் தொகுப்பு குறிப்பிடத்தக்கது. செய்திகள், கட்டுரைகள் எழுதும் என்னை ஊக்கப்படுத்தி சிறு பிரசுரங்களையும் நூலையும் வெளியிட வைத்தவர் என் செல்வராஜா. இன்னும் சில நூல்களை வெளியிடுவதற்கு ஊக்கமும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றார்.
இவற்றுக்கு அப்பால் ஈழத் தமிழ் சமூகத்தைத் தாண்டி மலேசியாவில் உள்ள தமிழ் துறைக்கும் செல்வராஜா தனது உழைப்பை வழங்கி உள்ளார். செல்வராஜாவின் ஏற்பாட்டில் தேசம் மலேசிய இலக்கிய மாநாடு ஒன்றை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக மலேசிய தமிழ் நூல்தேட்டம் ஒன்றை செல்வராஜா உருவாக்கினார். ஒடுக்குமுறைக்கு உள்ளான இரு தமிழ் சமூகங்களின் உறவில் இவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்.
இவ்வாறு செல்வராஜாவின் பொது வாழ்க்கை பரந்து விரிந்துள்ளது. அவருடைய காலத்தில் வாழ்ந்தோம் என்பதும் அவருடைய இலக்கு நோக்கிய பயணத்தின் சில செயற்பாடுகளில் அவருக்கு ஒத்துழைப்பாக இருந்தோம் என்பதும் பெருமைக்குரியது. எதிர்காலம் செல்வராஜாவை எவ்வாறு பதிவு செய்து கொள்ளும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் நூல்களைப் பதிவு செய்வதனூடாக தமிழ் சமூகத்தின் கடந்தகால வரலாற்றையும் தற்போது நடந்துகொண்டுள்ள வரலாற்றையும் என் செல்வராஜா பல்வேறு கோணங்களிலும் பதிவு செய்துள்ளார். என் செல்வராஜா திரை கடல் ஓடி திரவியம் தேடவில்லை. ஆனால் என் செல்வராஜா தமிழ் சமூகத்தின் ஒரு விலை மதிக்க முடியாத திரவியம்.