தேடலையே வாழ்க்கையாக்கிக் கொண்ட நூலகவியலாளர்

இலக்கியத்துறையின் பல்வேறுபட்ட பிரிவுகளில் உள்ள எழுத்தாளர்களை அந்த அந்தப் பிரிவினரே அதிகமாக நன்கு அறிந்துவைத்திருப்பார்கள். ஆனால் நூலகவியலாளரும் ஊடகவியலாளருமான திரு.என்.செல்வராஜாவை அறிவியல்புலத்தின் அனைத்துப் பிரிவினரும் பரவலாக அறிந்து வைத்துள்ளார்கள் என்றால் அவர் மேற்கொண்டுள்ள பாரிய பணியும் அவருக்கேயுரிய தனித்துவமான நற்பண்புகளும்தான் காரணம்.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை இதுவரை ‘நூல்தேட்டம்’ என்ற வரிசையில் ஒன்பது பெரிய தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். தற்போது பத்தாவது தொகுப்பினை நிறைவுசெய்து அச்சிட ஆயத்தங்கள் செய்துவருவதுடன் பதினொராவது தொகுப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கின்றார். தவிரவும், உலகெங்கும் பரந்து வாழும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில நூல்களையும், மலேசியா சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்களையும் இவர் தனித் தொகுதிகளாகத் தொகுத்துள்ளார். ஆசிரியர் நிரையில் இவரின் பெயரில் இதுவரை 37 நூல்கள் வெளியாகியுள்ளன. தவிரவும், உலக அரங்கில் தமிழ்ப் பத்திரிகைகளையும், இலக்கியச் சஞ்சிகைகளையும், சிறப்பு மலர்களையும், இணையத்தளங்களிலும் இவரின் பல கட்டுரைகள் அலங்கரித்தவண்ணம் இருக்கின்றன.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஒரு எழுத்தாளர் விழாவில் ஈழத்து நூல்களின் ஆவணவாக்கம் பற்றி இவர் சமர்ப்பித்திருந்த ஆய்வறிக்கை பல அறிஞர்களின் கவனத்துக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதை நேரில் அவதானித்திருந்தேன்.

மேலாக, நீண்டகாலமாக லண்டன் ஐ.பீ.சீ. தமிழ் வானொலியில் ஞாயிறு காலைகளில் ‘காலைக்கலசம்’ என்னும் நிகழ்வில் எம்மவரின் நூல்கள் பற்றிய அறிமுகம் அவரின் வெண்கலக் குரலிலும் பிசிறில்லாத தமிழ் உச்சரிப்பிலும் ஒலிபரப்பப்பட்டு வருவது மிக ஆரோக்கியமான நிகழ்வு. அப்பொழுது அவரின் முகம் எனக்குத் தெரியாது. அவருடைய பின்னணி எனக்குத் தெரியாது. எந்த ‘இசம்’களின் பிரதிநிதியாக அவர் உலாவுகின்றார் எனவும் எனக்குத் தெரியாது. ஆனால் நூல்கள் பற்றிய ஆளுமை அவரின் விமர்சனப் பார்வையுள் தெரிந்தது. பின்புதான் அறிந்தேன் ‘நூல்தேட்டத்தின்’ சொந்தக்காரர் இவர்தான் என்று!

அந்த முகம் தெரியாத மனிதரிடம் எனது முதல் புத்தக வெளியீட்டுக்கு இலண்டனிலிருந்து டென்மார்க்கிற்கு வரும்படி தயங்கியபடி ஒரு அழைப்புவிடுத்தேன்.

“அதற்கென்ன வரலாமே” என்றார். எனது முகம் தெரியாமலேயே எனது முதல் படைப்பான ‘யாவும் கற்பனை அல்ல’ என்ற நூலின் வெளியீட்டு விழாவுக்கு வந்து சிறப்பித்ததை இந்தத் தருணத்தில் என் மனம் நன்றியுடன் எண்ணிப்பார்த்துக் கொள்கின்றது.

புலம்பெயர் தேசத்தில் வாழும் அனைவருக்கும் கோடைகால விடுமுறை என்பது களியாட்டங்களும் சுற்றுலாக்களும் என அமைந்திருக்க, இவருக்கோ ஏதாவது ஒரு நாட்டில் பதிப்பகத்தினுள் அல்லது பல்கலைக்கழக நூல்நிலையத்தினுள் கழிந்துகொண்டிருக்கும்.

தவிரவும் ஐரோப்பாவின் பல இலக்கிய மேடைகளில் இவரின் பிரசன்னம் அவரின் இலக்கியத் தேடலுக்குச் சான்றாக அமைகின்றது.

அவரது கட்டுரைத்தொகுப்பொன்றை ‘தேடலே வாழ்க்கையாய்’ என்ற தலைப்பில் விஸ்வசேது இலக்கியப் பாலத்தினூடாக 2010இல் வெளியீடு செய்திருந்தோம்.

இந்த மனிதர் மணிவிழா காணும்பொழுது மனதுக்குள் ஒரு பயமும் குடிகொள்கின்றது. 401 இதழ்களுடன் டொமினிக் ஜீவாவின் ‘மல்லிகை’ நின்றுவிட்டதுபோல், நூல்தேட்ட வரிசையும் ஒருகாலத்தில் நின்றுவிடக்கூடாது என்பது ஒன்று. இரண்டாவது ஏக்கம்;-இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டுசெல்லப்போகின்றவர் எங்களிடையே யார் என்பது.

இதற்கு என்னிடம் உள்ள ஒரே பதில் அவர் நோய் நொடியின்றி இன்னும் நீண்டகாலம் இந்தப் பணியைத் தொடரவேண்டும் என்பதுதான். “நினைவு நல்லது வேண்டும்”.

வி.ஜீவகுமாரன்

(இயக்குநர், விஸ்வசேது இலக்கியப்பாலம், டென்மார்க்)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email