சாதனை படைத்துவரும் நூலகவியலாளர் என்.செல்வராஜா

நூலகவியல் துறையில் நல்ல அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட திரு.என்.செல்வராஜா அவர்கள் அதன் மூலம் தமிழ்ச் சமுதாயத்திற்குக் கல்வி தொடர்பாக அளப்பரிய சேவைஆற்றி வருகின்றார். இவ்வாண்டு அகவை அறுபதை எய்தும் அவரது வாழ்க்கையின் சாதனையை எண்ணிப்பார்க்கும் போது ஒரு தனிமனிதர் எவ்வாறு இச்சாதனையைப் புரிந்தார் என்பது அதிசயம்.

நேர்மையான போக்கு, உறுதியான சிந்தனை, எடுத்ததைச் சாதிக்கவேண்டும் என்ற துணிவு, வேறு எவரிலும் தங்கியிராது தன்னம்பிக்கையுடன் செயற்படும் குணம், குடும்ப ஒத்துழைப்பு ஆகியவையே இவரது சாதனைக்கான முதலீடுகள் என்பேன்.

திரு. செல்வராஜா அவர்கள் தனது விருப்பத்திற்குரிய துறையாக நூலகத்துறையைத் தேர்ந்தவர். அத்துறையில் அவர்கொண்ட பற்றும் உறுதியுமே அவரை இன்றளவும் உலகத் தமிழர்களிடையே பிரசித்திபெற்ற ஒரேயொரு ஈழத்தமிழ் நூலகவியலாளராக எம்மிடையே நிலைநிறுத்தியுள்ளது. தனது நூலகத்துறை அனுபவங்களையும் ஆற்றலையும் அடிப்படையாகக்கொண்டு தமிழ் இனத்தின் சுவடுகளாக நின்று நிலைக்கப்போகும் நூல்தேட்டம் என்ற பாரிய ஆவணப் பணியில் தன் சிந்தனைகளைக் குவித்துள்ளார்.

எந்தவித அரசியல் கண்ணோட்டமுமின்றி நூலகத்துறையை வளர்த்துவருவதினால் தனிமதிப்போடு மக்கள் இவரை நோக்குகின்றனர். எந்த கடினமான நிலையிலும் தனது அடிப்படைக் கொள்கையிலிருந்து தவறாது செயற்படுபவர் இவர் என்ற எண்ணத்தைத் தன் செயல்களினூடாக மற்றவர்களுக்கு உணர்த்திவருபவர்.

“ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா” என்னும் நூலை 2003ஆம் ஆண்டு வெளியிடுவதற்கு நான் முனைந்த 2000ஆம் ஆண்டுவாக்கில் திரு.என்.செல்வராஜாவுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. அந்நூலுக்கான கருப்பொருட்களை வாசித்த பின்பு தானே முன்வந்து அந்த நூலை வடிவமைப்புச்செய்து அதற்கான அட்டைப் படத்தையும் தயாரித்து அந்நூலை 2003இல் நாம் வெளியிடத் தனது முழு ஆதரவையும் நல்கியதை மறக்கமுடியாது.

சமுதாயத்திற்கு நல்லது எது என்று கருதுகிறாரோ அதை எந்த சுயநலநோக்கமுமின்றி உதவும் பண்பாளர் இவர். 15வருடங்களுக்கு மேலாக இவருடன் ஏற்பட்ட தொடர்பால் இவரது தூய்மையான பணிகளை நானும் நன்கு அறிவேன்.

நூலகத்துறையில் நல்ல அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட இவர் அத்துறையை தமிழ் மக்களிடையே வளர்ப்பதற்கு பல வழிகாட்டி நூல்களை அச்சிட்டு வழங்கி வந்தவர். யாழ்.நூல்நிலையம் எரியூட்டப்பட்டதால் பெரும் வேதனை அடைந்த இவர் அந்நூல்நிலையம் எரியுண்ட வரலாற்றுத் தகவல்களை ஒருங்குதிரட்டி ஒரு நூலாக வெளியிடுவதற்கு இவர்பட்ட கஸ்டத்தை நான் நன்கு அறிவேன். அந்தப் பெறுமதிவாய்ந்த வெளியீடுகளை சொந்தப் பணச்செலவில், அச்சிட்டு வெளியிடுவதற்கு அவர் அன்றுபட்ட கஸ்டங்களையும் நான் நன்கு அறிவேன்.

யாழ் – நூல்நிலையம் பற்றிய வரலாற்று ஆவணத் தொகுப்பு வெளியீடு புலம்பெயர் தமிழர்களை விழிப்படையச்செய்தது. அரசாங்கம் திட்டமிட்டு இந்த கலாசார அழிவை ஏற்படுத்தியதை துணிந்து கூறியவர். ஒரு நூலகவியலாளர் என்ற முறையில் நூல்நிலையத்தின் இழப்பை நன்கு புரிந்துகொண்டவர். அவரது நூல் இன்றளவில் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாகப் பேணப்பட்டு பலராலும் எடுத்தாளப்பட்டு வருவது கண்கூடு.

அந்த உணர்வை ஒரு நூலாக்கி சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தவர். அது அவருடைய ஒரு சாதனை. அதேபோன்று தற்போது 2014இலும் “தீ தின்ற தமிழர் தேட்டம்” என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்துப் பொது நூலக எரிப்பினை உணர்வுபூர்வமாகத் தாங்கிவந்த கவிதைகளை- 1981 முதல் இன்றுவரை எழுதப்பெற்று வந்த ஏராளமான கவிதைகளைத் தொகுத்து ஈழத்தமிழர்களின் உணர்வினை ஒரு நிரந்தரமான படிமமாகப் பேணும் வகையில் இந்தத் தொகுப்பினையும் செல்வராஜா உருவாக்கியுள்ளார். அதனை யாழ்ப்பாணப் பொது நூலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவிக்காக இவர் தனது சொந்தப் பணச்செலவில் தயாரித்து வழங்கியமை யாழ்ப்பாணப் பொது நூலகத்தின்பால் குறிப்பாகவும், ஈழத்துத் தமிழ் நூலகர்களின்பால் பொதுவாகவும் கொண்ட வாஞ்சையையே காட்டுகின்றது.

ஈழத்தவர்களின் நூல்களை ஆவணப்படுத்தவேண்டும் என்ற அக்கறைகொண்ட இவர் “நூல் தோட்டம்” என்ற பெயரில் ஒரு பெரும்பணியை ஆரம்பித்தார். அரசியல், சமயம், இலக்கியம், கலை, வரலாறு மற்றும் பல்வேறுதுறைகளில் எழுதப்பட்ட ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களின் சேர்க்கையே இத்தொகுப்பு. இது மிக அற்புதமானது. இவர் மணிவிழாக்காணும் போது 10 நூல்தேட்டத் தொகுப்புக்கள் நிறைவுபெறுகின்றன. மொத்தம் 10,000 ஈழத்தமிழர்களின் ஆக்கங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு முழுநேரத் தொழில்செய்துகொண்டும், ஒரு தனிமனிதனாக இந்த அளப்பரிய பணியை செய்து வருகிறார். லண்டன் இயந்திர வாழ்க்கையில் ஒரு சிறு விடயத்துக்கே நேரமில்லாமல் நாம் தவிக்கும்போது, இவருக்கு மட்டும் எங்கிருந்துதான் இவ்வளவு நேரம் கிடைக்கின்றது என நான் அடிக்கடி ஏங்குவதுண்டு. நேர முகாமைத்துவத்தை கச்சிதமாகக் கையாள்பவர் இவர்.

நூல்தேட்டத்திற்கு வேண்டிய நூல்களின் தகவல்களை இலண்டனிலிருந்து கொண்டு இலகுவில் பெறமுடியாது. கனடா, அவுஸ்திரேலியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஜேர்மனி, நோர்வே, பிரான்ஸ், டென்மார்க், சென்னை என்று பறந்து திரிந்து நூல்களைத் தேடிப் பதிந்துவந்துள்ளார். தான் வாழும் காலத்தில் தமிழ் இனத்திற்கு ஏதாவது ஒரு ஆக்கபூர்வமான பணியை செய்துமுடிக்கவேண்டும் என்ற ஆதங்கத்தால் எழுந்த உத்வேகமே இவரை இப்பணியில் தீவிரமாக ஈடுபடவைக்கிறது என்பதை அவருடன் நெருக்கமாகப் பழகும் என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.

நூல்தேட்டத்தின் முக்கியத்துவம் பற்றி திரு.செல்வராஜா 2002இல் கூறியவை.

“நூல்கள் எமது இனத்தின் பண்பாட்டை, கலாச்சார விழுமியங்களை, அறிவியல் தேடலை அளவிட உதவும் சாதனமாகும். அத்தகைய அறிவேடுகளின் பதிவு எமது வளத்தையும் அறிவின் தேட்டத்தையும் எமது தலைமுறைக்கும் அடுத்துவரும் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் வல்லமை படைத்தன. அத்தகைய ஒரு வரலாற்றுப் பதிவை – ஈழத்தமிழ்த் தேசியத்தின் அறிவுத்தேட்டத்தின் கனதியை பதிவாக்க முனையும் முடிவில்லாதவொரு நீண்ட பயணத்திற்கான முதற்காலடித்தடம் இங்கே பதியப்படுகிறது.”

முடிவில்லாத பயணம் என்று அன்று தீர்க்கதரிசனமாகக் கூறியதில் அர்த்தம் இருந்தது. இந்தப் பன்னிரண்டு ஆண்டு காலத்தில் 10 நூல்தேட்டத் தொகுதிகளை நிறைவு செய்தவர் தொடர்ந்தும் 11வது தொகுதியில் காலடிவைத்துள்ளார். 10 நூல்தேட்டத் தொகுதிகள் அகவை அறுபதில் ஒரு பெரும் சாதனை. தமிழ் மக்களை, தமிழ் அமைப்புக்களை ஒன்றிணைத்து இவருக்கு ஒரு விருது வழங்குவதே நாம் நூலகவியலாளருக்குக் கொடுக்கும் கௌரவமாகும். அவர் விருதை விரும்பாவிட்டாலும் தமிழ்ச் சமூகம் அதைச் செய்யக் கடமைப்பட்டுள்ளது.

இவர் எந்தப் பணியையும் எவருக்கும் கட்டுப்பட்டுச் செயற்படமாட்டார். சுதந்திரமாகச் சிந்தித்துச் செயலாற்றும் ஆற்றலுடையவர். பணத்திற்காகத் தனது கொள்கையைவிட்டுக் கொடுக்கமாட்டார். எனவேதான் தனிமனிதனாக இந்த முயற்சியை மேற்கொண்டுவருகிறார். பணபலம் இல்லாவிட்டாலும் மனபலத்துடன் தனது சொந்தக்குடும்பத்தையே நம்பி தனியொரு மனித நிறுவனமாகச் செயற்படும் இவரது பணிகள் தங்குதடையின்றித் தொடரவேண்டுமேயானால், ஈழத்தமிழர்கள்தான் இவருக்குத் தமது பொருளாதாரப் பங்களிப்பை அவர் கேளாமல் வழங்கவேண்டும். அவர் கேட்பதெல்லாம், தனது நூலின் ஒரு பிரதியையாவது வாங்கிவைத்திருங்கள், அல்லது நீங்கள் சார்ந்த பாடசாலை நூலகத்திற்கோ, பொதுநூலகத்திற்கோ வழங்க நடவடிக்கை எடுங்கள் என்பதுதான். இதைத் தனது நூலில் இவர் எப்போதும் குறிப்பிடுகிறார். கவனிப்பாரற்றிருந்த ஒரு தரிசு நிலத்தைத் தன்வியர்வை சிந்திப் பண்படுத்தி, நாற்றுநட்டு, பயிர் வளர்த்து, அதைப் பீடைகளிலிருந்து பாதுகாத்து, அறுவடைக்குத் தயாராக்கி இன்று பசியாற உண்ண வாருங்கள் என்றுதான் அழைக்கிறார். ஈழத்தமிழரான நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? தொடர்ந்து செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் அவரது குரல் ஒலிக்கப்போகிறதா? அந்த அறிவுத்தேட்டத்தின் விவசாயிக்கு என்ன பதில் தரப்போகிறோம்?

ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகம்

2008 சித்திரை மாதம் முதல் மற்றுமோர் பாரிய பணியினையும் லண்டனில் திரு.செல்வராஜா அவர்கள் மேற்கொண்டு வருகிறார். பெறுமதி வாய்ந்த 97,000 நூல்களும் அதைக் கொண்டிருந்த யாழ்ப்பாண நூல்நிலையமும் அரசாங்கத்தால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட கொடூரத்தை நன்கு உணர்ந்த நூலகவியலாளர் தமிழ் மக்களுக்கான ஒரு சுயமான ஆட்சி கிடைக்காதவரையும் நூல் நிலையங்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்பதை தீர்க்கமாக உணர்ந்த காரணத்தால், ஈழத் தமிழ் நூல்களை, தமிழர் தொடர்பான வரலாற்று, கலாச்சார மூலங்களை ஐரோப்பிய நாடு ஒன்றில் பாதுகாத்து வைப்பதற்கான ஆவணக் காப்பகத்தை அமைக்கவேண்டும் என்று திட்டமிட்டார். அதற்கான ஆரம்ப பணியாக அந்த நிறுவனத்தை ஒரு அறக்கட்டளையாகவும் பிரித்தானியாவில் பதிவுசெய்து செயற்பட்டு வருகிறார்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 10இலட்சம் தமிழர்களுக்கு மட்டுமின்றி ஏனைய நாட்டவர்களான தமிழர்களுக்கும், நூல்ஆய்வு செய்யும் வெளிநாட்டவர்களுக்கும் இந்நூல்நிலையம் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இக்காப்பகத்தின் நோக்கம், தேவைகள் பற்றி ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டு மக்கள் ஆதரவைக் கோரியிருந்தார் திரு.செல்வராஜா அவர்கள்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கான சமய, சமூகவியல், கலை, கலாச்சாரம், இலக்கியம், வரலாறு மற்றும் அறிவியல் துறைகளில் ஆய்வுத் தேவைக்கான தகவல்களை வழங்கி ஈழத்தமிழர்கள் பற்றிய உலகளாவிய தேடலுக்கான ஒரு வளநிலையமாக அமைய இருப்பதே இக்காப்பகம். மேலும் இன்று எட்டுத் திக்குகளிலும் வெளிவந்துகொண்டிருக்கும் ஈழத்தவர்களின் படைப்புக்களை ஓரிடத்தில் சேகரித்து அவற்றைப் புகலிடத்திலும், தாயகத்திலும் உள்ள ஆய்வாளர்களுக்கும், எதிர்காலத்தலைமுறையினருக்கும் ஒரேகூரையின் கீழ்ப் பார்வையிட வசதி செய்து வைக்கும் ஆவணக்காப்பகம் ஒன்றின் தேவையை நிறைவேற்றவே இக்காப்பகம் என இதன் நோக்கத்தை திரு.செல்வராஜா ஒரு கையேடு மூலம் விபரமாக வெளியிட்டுள்ளார்.

இந்நிறுவனம் முற்றிலும் சமூக நோக்கம் கொண்ட ஆய்வு நிறுவனம். எந்தவித அரசியல், சமய, சமூக வரையறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாது. எனவே இந்நிறுவனத்தின் வளர்ச்சி உலகத் தமிழ் இனத்தின் ஒரு பிரிவினரான ஈழத்தமிழ் இனத்தினதும் புலம்பெயர் தமிழர்களதும் சமூக, வரலாற்று, விழுமியங்கள் மற்றும் இருப்புப் பற்றிய தகவல்களைப் பாதுகாத்து தமிழர் அல்லாதவர்களுக்கும், ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் எதிர்காலத் தலைமுறைக்கும் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டதே இக்காப்பகம். இவற்றை நன்கு புரிந்துகொண்ட அன்பர்கள் பங்காளிகளாகி ஆதரவு நல்குமாறு – அதாவது மாதாந்தம் சிறுதொகை நிதியுதவி செய்யுமாறு பணிவாகக் கேட்டுள்ளார்.

ஒவ்வொருவரிடமும் கேட்பது மாதந்தோறும் குறைந்தபட்சம் 5 ஸ்டேர்லின் பவுண்கள் வீதம், வங்கிக்கட்டளை மூலம் மேற்படி அவணக்காப்பகத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தி உதவுங்கள் என்பதே. அவ்வாறு 1000 பேர் செலுத்தும் சிறுதொகையே ஒரு பாரிய ஆவணக்காப்பகத்தை செயற்படுத்த வழிவகுக்கும் அடிப்படை நிதிவசதியைத் தந்தவிடுமென்று பணிவாகக் கேட்டுள்ளார். அறிவுசார் மக்கள் இதைக் கருத்தில் கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

ஆனால் இதுவரையும் இவரது வேண்டுகோளுக்குச் செவிமடுத்து, தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்து ஆதரவு நல்கும் ஈழத்தமிழர் புகலிடத்தில் எண்ணிக்கையில் பெரிதாகக் காணப்படாதபோதும், மனம் தளராது தான் மேற்கொண்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். காப்பகத்தை அமைப்பதற்கு இலண்டனில் நல்ல உள்ளம் படைத்த ஒருவர் ஒரு வீட்டை அன்பளிப்பாக வழங்கினால் அவர் சேகரித்து வைத்திருக்கும் 5000 நூல்களுடன் அந்தக் காப்பகத்தை தொடங்கலாம் என்ற நம்பிக்கையுடன் உள்ளார். இலண்டனில் 30க்கு மேற்பட்ட ஆலயங்கள் அமைப்பதற்கு கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்யும் எம்மக்கள் இந்த அறிவியல் பணிக்கு உதவமுன்வராதது ஏன் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இந்நாட்டில் 35வருடமாக இயங்கி வரும் சைவமுன்னேற்றச் சங்கம் ஒரு புதிய ஆலயத்தை அமைப்பதற்கு 250,000 திரட்ட முன்வந்திருக்கிறது. அந்த அமைப்பு இந்தக் காப்பகத்திற்கு உதவ முன்வந்தால் அதன் பணியைத் தமிழ் உலகம் பாராட்டும். வரலாற்றுப் பெறுமதி வாய்ந்த நூல்களை சேகரித்துப் பாதுகாப்பாக வைப்பதற்கு ஒரு காப்பகத்தை உருவாக்க தனிமனிதனாக முனைந்திருக்கும் நூலகவியலாளர் திரு.செல்வராஜா அவர்கள் திட்டமிட்டிருக்கும் இந்த நற்பணிக்கு பணம்படைத்த தமிழ் உள்ளங்கள் ஏன் உதவ முன்வரக்கூடாது? வெளிநாட்டில் இவ்வாறான ஒரு நூலகம் அமைவதனால் தமிழர்களுடைய அடையாளம் உலக அரங்கில் மேலோங்கும்.

ஈழத்துப் புத்தகச் சந்தையும் எழுத்தாளர் ஒன்றுகூடலும்

வாசிப்புப் பழக்கத்தை இழந்துவரும் எமது புலம்பெயர் சமூகத்தில் அதனை மீள ஊக்குவிக்கும் வகையில் புதியவழிகளில் சிந்தித்து, தமிழ்ச் சமுதாயத்திற்கு பயன்நல்குவதுடன், நலிந்துசெல்லும் ஈழத்துத் தமிழ்ப்பதிப்புலகுக்கும் தன்னாலான பணிகளை செல்வராஜா ஆற்றி வருகிறார். அண்மைக் காலத்தில் இவர் ஈழத்துப் பதிப்பகங்களுடன் இணைந்து அவர்களின் வளர்ச்சிகருதி ஆரம்பித்துள்ள “புத்தகச் சந்தையும் எழுத்தாளர் ஒன்றுகூடலும்” இதற்கு ஒரு உதாரணமாகும். இது ஒரு புத்தக வியாபாரக் கடையல்ல. 125,000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இலண்டனில் ஒரு தமிழ்ப் புத்தக நிலையம் இல்லை. ஈழத்தில் வெளியாகும் நல்ல தமிழ் நூல்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து திரு.செல்வராஜா ஒரு புதிய இலகுவான வழியை இலண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

இலங்கையில் உள்ள சில பதிப்பகங்களுடன் தொடர்புகொண்டு இலங்கை விலையில் அவர்களது அண்மைக்கால வெளியீடுகளை இலண்டனுக்கு தருவித்து மலிவு விலையில் அவற்றை இலண்டனிலுள்ள புத்தகப் பிரியர்களுக்கு வழங்குவதாகும். இந்தப் புத்தகச் சந்தையில் இவருக்குத் தோள்கொடுத்து பணிபுரிபவர்கள் இளம்தொண்டர்கள். குறிப்பாக திரு.செல்வராஜாவின் முழுக் குடும்பமுமே புத்தகச் சந்தைகளில் முழுப்பணியையும் ஓடி ஓடிச் செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது. இந்தச் சந்தை மூலம் லண்டனில் பல எழுத்தாளர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடல்கள் இடம்பெறுவது மற்றுமோர் அம்சம். வாசிப்பில் ஆர்வம் மிகுந்தவர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களை பார்வையிட்டு, இலகுவாக மலிவான விலையில் பெற்றுக்கொள்வதோடு, பல இலக்கிய நண்பர்களைச் சந்தித்து மிக ஆறுதலாக உரையாடும் இடமாகவும் புத்தகச்சந்தை விளங்குகிறது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் நூல்களை ஆறஅமர நன்கு வாசித்து தேவையானவற்றைத் தெரிவுசெய்வதற்கு இந்த சந்தர்ப்பம் பயன்படுகிறது. இதுவரை ஏழு புத்தகச் சந்தைகளை கடந்த மூன்றாண்டுகளில் இவர் நடத்திமுடித்துள்ளார். திரு.செல்வராசா ஒரு நூலகவியலாளர் என்பதனால் வாசகர்களுக்குத் தேவையான ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களை நன்கு தேர்ந்து தெரிவுசெய்து தருவிக்கிறார். இலங்கையில் விற்பனையாகும் விலைக்கு விற்பனை செய்யும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளார்.

இதற்காக இவரும் இவரது குடும்பமும் பெரும் தியாகம் செய்கின்றனர். எடுத்த கருமத்தை எந்தச் சிரமத்தின் மத்தியிலும் தொடர்ந்து செய்யும் வல்லவராக விளங்குகிறார் திரு.செல்வராஜா அவர்கள் என்பதை புத்தகச் சந்தைகளே மௌனசாட்சிகளாக நின்று நமக்குக் காட்டுகின்றன. அவர் நடைமுறைப்படுத்தும் பதிய வழிகள் பாராட்டத்தக்கன.

எழுத்து மூலம் சாதனைகள் படைத்து வருகிறார்.

தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் திரு.செல்வராஜா, மக்களுக்குப் பயன்படும் வகையில் அவற்றைக் கட்டுரையாகவோ, சிறு நூல்களாகவோ வெளியிட்டு வருகிறார். இலண்டன் “சுடரொளி” சஞ்சிகையில் தொடர்ந்து எழுதி வந்த மலையக எழுத்தாளர்களின் வரலாறு ஒரு நூலாகப் பின்னர் வெளிவந்தது.

ஈழமண்ணில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு – நூல்வழிப் பதிவுகள் பற்றிய தேடலை இவர் 22 பக்கங்களில் ஒரு பெரும் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார். இந்திய அமைதிகாக்கும்;; படையின் கொடுமைகள் நிகழ்ந்த காலத்தில், அவை பற்றித் துணிவுடன் பலர் பலதுறைப்பட்ட படைப்புக்களை கவிதையாக, கதையாக, கட்டுரையாக வெளியிட்டிருந்தனர். இவ்வாறு வெளியிடப்பட்ட 48 நூல்களைத் தேடி எடுத்து அவற்றின் சாராம்சங்களைக்கொண்ட நீண்ட கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987இல் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கும் இலங்கை ஐனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் இலங்கையில் சமாதானத்தை நிலைநிறுத்வென அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய இராணுவம் யூலை 1987இல் எமது தாயகத்துள் புகுந்தது. முகம்மலர, மங்கள வாத்தியம் முழங்க, நெற்றியில் திலகமிட்டு இந்திய அமைதிப் படையை எம்மவர்கள் ஈழத்தமிழ் மண்ணில் வரவேற்றார்கள். அதன் பின்னர் அமைதிப்படை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமாகி எமது அமைதியைக் குலைத்த வரலாறு என்றுமே ஈழத்தமிழர் மனதைவிட்டு அழியப்போவதில்லை.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும் அதற்கான தேவையையும் இராணுவ ஆக்கிரமிப்புக் காலகட்ட நடவடிக்கைகளையும் விரிவாக அமைதிப்படையின் ஒருபக்கச் சார்பாகப் பதிவுசெய்யும் நடைமுறை வெற்றிகரமாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் திபேந்திரசிங், மேஜர் ஜெனரல் ஹார்கிரத்சிங், லெப்டினன்ட் ஜெனரல் சர்தே பாண்டே மற்றும் லெப்டினன் ஜெனரல் ஏ.ஆர்.கல்கட் ஆகியோரின் பார்வையிலும் பிற இராணுவ ஆய்வாளர்கள், அதிகாரிகளின் பார்வையிலும் அவ்வப்போது ஆங்கில மொழியில் பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்து இந்திய ஆக்கிரமிப்பாளரின் பார்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது போரின் நியாயத் தன்மை பற்றி விரிவாகவே பேசப்பட்டிருந்தது.

இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் உயிரிழந்து, உடமைகள் இழந்து கதியற்றுப்போன குடும்பங்கள் பல. குரல்கள் ஒடுக்கப்பட்ட அவர்களின் பார்வையில் இந்த அக்கிரமிப்பு வரலாற்றுப் பதிவாக்க முன்வந்தவை, ஈழத்துப் படைப்பாளிகளினதும், இளம் போராளிகளினதும் ஆக்க இலக்கியப் படைப்புக்களே. கவிதைகளாகவும், கதைகளாகவும் பத்திரிகைகளில் அக்காலகட்டத்தில் வெளியாகிய பல படைப்புக்களில் ஒரு பகுதியே பின்னாளில் நூலுருவில் நிலைகொண்டன. ஈழத்தமிழரின் அந்த அவலம் நிறைந்த வாழ்வின் கொடுமையால், தாயகத்தைவிட்டே புலம்பெயர்ந்து அயல்நாடுகளுக்கு அகதியாகச் சென்றோர் எராளம். இந்திய இராணுவம் ஏற்படுத்திய ஆறாத வடுக்களைச் சுமந்துகொண்டு எம்மவரில் பலர் இன்னும் அந்தக் காயங்களின் வலிகளுடனும், வடுக்களுடனும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இந்திய அமைதிப் படையின் வரவை வரலாற்றுப் பதிவாக்கிய சில பிரசுரங்கள் பற்றிய விரிவானதொரு ஆய்வே இக்கட்டுரையாகும் என திரு.செல்வராஜா தனது அறிமுக உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அறிஞர்களின் வரலாறு

தமிழை வளர்த்த பல தமிழ் அறிஞர்களின் வரலாறுகள் மறந்தும், மறைக்கப்பட்டும் இருப்பதை உணர்ந்த திரு.செல்வராஜா அந்த அறிஞர்களின் வரலாற்றை வெளிக்கொணர்வதற்கான பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றார்.

பல்கலைப் புலவர் க.சி.குலரத்தினம் அவர்கள் சைவத்தையும் தமிழையும் வளர்க்க அளப்பரிய பணியாற்றியுள்ளார். 1916இல் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் பிறந்த க.சி.குலரத்தினம் அவர்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியராகப் பயிற்சிபெற்று பல காலம் ஆசிரியராகப் பணியாற்றி பின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் தனது தேடலைத் தொடர்ந்தபடி இருந்த ஒரு தமிழ் அறிஞர். இவருடைய வாழ்க்கையைப் பதிவுசெய்யும் முறையான வரலாறு இல்லையேயென்ற கவலை கொண்ட திரு.செல்வராஜா அவர்கள் அவர் பற்றிய வரலாற்று நூலுக்கு முன்னுரையாக அமரர் க.சி.குலரத்தினம் அவரது வாழ்வும் எழுத்தும் என்று ஓரு நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர்பற்றிய வரலாற்றுப்பதிவுகளைத் தேடித் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சுடரொளி வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட பல்கலைப் புலவர் க.சி.குலரத்தினம் அவர்களின் “செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்,” “தமிழ் தந்த தாதாக்கள்” ஆகிய நூல்களை வாசித்த பின்னர் அவரது வரலாற்றை வெளியிடவேண்டும் என்ற சிந்தனை தனக்கு வலுவடைந்தது என்பதை என்னுடன் கதைக்கும்வேளையில் அவர் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.

யாழப்பாண மண்ணில் பிறந்து ஒரு ஆவண ஞானியாக-ஒரு பிரமச்சரிய விரதராகவே வாழ்ந்து மறைந்த அப்பெரியாரின் வாழக்கை வரலாறு பற்றிக் கூறும் ஒரு நூல் கூட ஈழத்திலிருந்து இதுவரை வெளிவராமல்போனது வேதனைக்குரிய விடயமாகும். அவரது காலத்தில் வாழ்ந்து, அவரால் பலன்பெற்ற பலர்; இன்றும் எம்மிடையே உலாவந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அமரர் க.சி.குலரத்தினம் பற்றிய தமது மனப்பதிவுகளையாவது அவ்வப்போது பத்திரிகைகளில் பதிவு செய்தால் ஒருகாலத்தில் எவரோ ஒருவர் அவற்றைச் சேர்த்து அமரர் க.சி.குலரத்தினத்தின் வாழ்வும் பணிகளும் என்று ஒரு நூலையாவது பதிவு செய்து வைக்கமுடியும் எனத் தனது ஆதங்கத்தை திரு செல்வராஜா க.சி.குலரத்தினம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளார்.

நவாலியில் பிறந்து கந்தரோடையில் மறைந்த பன்நூல் ஆசிரியர் ந.சி.கந்தையாபிள்ளை என்ற தமிழ் அறிஞரின் வரலாற்றை எழுதுவதற்கு திரு.செல்வராஜா முயற்சி எடுத்து வருகிறார். இந்த அறிஞரின் வரலாறும் எம்மவர் மத்தியில் பெரிதாகப் பதிவுக்குள்ளாகவில்லை. இலக்கியம், சமூகவியல் என்று பல்வேறு துறைகளிலும் இவர் அறுபத்தைந்து தமிழ் நூல்களுக்கு மேல் எழுதித் தமிழகத்தில் வெளியிட்டுள்ளதாக அறியக் கிடக்கிறது. நீண்டகாலம் புலம்பெயர்ந்து மலோயாவிலும் தமிழகத்திலும் வாழ்ந்தவர் இப்பெரியார்.

தனது தேடல் மூலம் கண்டறியும் ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் மறக்கப்பட்ட வரலாறுகளை வெளிக்கொணர செல்வராஜா பெரிதும் முயன்று வருகின்றார்.

நீண்டகாலமாகவே தனது வாழ்க்கையை மேற்குறிப்பிட்ட பணிகளில் அர்ப்பணித்து வரும் திரு.செல்வராஜா அவர்கள் இவ்வாண்டு மணிவிழாக் காணுகிறார். அவர் மேலும் நீண்டகாலம் வாழ்ந்து தமிழுக்கு நற்பணியாற்றவேண்டுமென சுடரொளி வெளியீட்டுக்கழகம் வாழத்துகிறது.

ஐ.தி.சம்பந்தன்

(ஆசிரியர்- சுடரொளி)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email