புனித அந்தோனியார் தேவாலயம். கொழும்பு 13: புனித அந்தோனியார் ஆலயம், கொச்சிக்கடை, 1வது பதிப்பு, 1985.(அச்சக விபரம் தரப்படவில்லை).
34 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 13.5×10 சமீ.
15.08. 1195 ஆம் ஆண்டு போர்த்துக்கல் தேச லிஸ்பன் நகரில் புனித அந்தோனியார் பிறந்தார். தம் வாழ் நாட்களில் வாழ்ந்த சீரிய வாழ்வே பிற்காலங்களில் இவரை புனிதராக கத்தோலிக்க திருச்சபையால் திருநிலைப்படுத்த வழி வகுத்தது. புனித அந்தோனியாரின் தந்தை பெயர் மார்ட்டின் புய்லோன் அன்னையின் பெயர் தெரேசா டி திவேரா. புனிதர் பிரபுக்கள் வம்சத்தில் பிறந்தவர். திருமுழுக்கின் வேளை பேர்டினைட் என்ற பெயர் இடப்பட்டது. இள வயதிலேயே சிறு துறவிகள் (Friars Minor) சபையில் இணைந்து ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தார். இக்கால கட்டத்தில் தம் பெயரை அந்தோனி என மாற்றிக்கொண்டார். இவருக்கு பதினைந்து வயது நடைபெறும்வேளை அகுஸ்த்தினார் சபையில் இணைந்து இறையியலை கற்று தேர்ந்து தேவ தொண்டாற்றினார். 13.06.1231 திகதியன்று 36 வயதில் இறைபதமெய்தினார்;. ஆசியாவிலேயே புனிதரின் நாமத்தில் உருவாக்கப்பட்ட பிரசித்தி பெற்ற ஆலயம் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயமாகும். பதினெட்டாம் நூற்றாண்;டில் இலங்கை ஒல்லாந்து தேசத்தவரால் ஆளப்பட்ட காலத்தில் கத்தோலிக்க மதம் தடைசெய்யப்பட்டிருந்தது. மதமாற்றம் பலவந்தமாக நடைமுறையிலிருந்தது. இக்காலத்தில்தான் வண.யோசேப்வாஸ் அடிகளாரும், வண யாக்கோமே கொன்சாலவெஸ் அடிகளாரும் இலங்கையில் திருத்தொண்டாற்ற முற்பட்டனர். இவர்கள் புனருத்தாரணம் செய்வித்த கொழும்பிற்கு நிலையான குரவர் என்ற முறையில் தொண்டாற்ற அன்டோனியோ என்ற குரவரை வரவழைத்தனர். அக்காலத்தில் அது ஒரு சிறு மீனவர் கிராமம். ஆண்டாண்டு காலமாக அக்கிராமவாசிகள் கடல் அரிப்பினால் தங்கள் நிலத்தை இழந்து வந்தார்கள். வண.அன்டோனியோ அடிகளார் தம் செபவல்லைமையால் கடலரிப்பைக் கட்டுப்படுத்தினார். கடலரிப்பு உச்ச நிலையிலிருந்த இடத்தில் ஒரு சிலுவையை நிறுவினார். புனித அந்தோனியார் பெயரால் சிறுகுடிசையில் ஒரு ஆலயம் அங்கு உருவாயிற்று. அன்டோனியோ அடிகளார் தம் கடைசிக்காலம்வரை அங்கிருந்து இறைவனின் மகிமையைப் பறைசாற்றி மரித்தார். அவர் தேகம் அங்கேயே அடக்கம் பண்ணப்பட்டது. இன்று நாம் காணும்.புனித அந்தோனியரின் சிறிய பீடம்தான் கடலரிப்பு அற்புதத்தின்போது மரச்சிலுவை நாட்டப்பட்ட இடம். 1806-ம் ஆண்டு ஆலயம் விரிவாக்கப்பட்டதன் பின்னர் 1822-ம் ஆண்டு கோவாவிலிருந்து கொண்டு வரப்பெற்று வைக்கப்பட்டதுதான் இப்பீடத்திலுள்ள சிறிய சுரூவம். 1828ம் ஆண்டு தொடங்கிய கட்டிடத் திருப்பணி 1834ம் ஆண்டு நிறைவுற்றது. மீண்டுமொருமுறை 1940ம் ஆண்டிலிருந்து இன்றைய உருக்கொண்ட ஆலயம் நாளெரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக எழில் தோற்றங் கொண்டு பொலிவு கூடி வருகின்றது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கொச்சிக்கடை புனித அந்தோனியார் மீதுபாடப்பெற்ற மன்றாட்டுப் பாடல்களின் தொகுப்பு இதுவாகும்.