10179 அல் குர் ஆனின் வரலாறும் வாழ்வுநெறியும்.

எம்.ஏ.எம்.சுக்ரி. பேருவளை: நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம், தபால் பெட்டி இலக்கம் 01, 1வது பதிப்பு, நவம்பர் 1981. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு).

xii, 178 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 17×12 சமீ.

மாத்தறையில் வசிக்கும் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் எழுதிய இந்நூல் அவரது முதலாவது நூல்வெளியீட்டு முயற்சியாகும். அல் குர் ஆன் பற்றி, அதன் தோற்றம், தொகுப்பு, அமைப்பு முறை, வாழ்வுநெறி, இஸ்லாமிய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் அது ஏற்படுத்திய தாக்கம், அதனோடு தொடர்புற்று வளர்ந்த கலைகள் என்பன பற்றி விரிவாகவும் ஆழமாகவும் இந்நூல் விளக்குகின்றது. அல்குர் ஆனின் தோற்றம் பற்றி விளக்கும் முன்னர் மனித அறிவின் மூலாதாரங்களான புலனுணர்வு, பகுத்தறிவு என்பவற்றை விமர்சனரீதியாக விளக்கி மனிதனின் யதார்த்தமான அறிவை இறைதூது ஒன்றின் மூலமாகவே பெறமுடியும் என்ற கருத்து நிறுவப்பட்டுள்ளது. திருக்குர் ஆனின் கோட்பாடும் கொள்கைநெறியும் என்ற அத்தியாயம் திருக்குர் ஆனின் போதனைகளை விரிவாக விளக்குகின்றது. திருக்குர் ஆனின் அடிப்படைக் கோட்பாடுகள் அனைத்தையும் தனிமனிதனின் வாழ்விலிருந்து குடும்பம், தனி மனிதன், பிரபஞ்சம் ஆகிய அம்சங்களைத் தழுவிநிற்கும் அதன் போதனைகள் விளக்கப்பட்டுள்ளன. தப்சீர் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஒரு இயலும் அதனைத் தொடர்ந்து வரும் இயல்களும் தப்ஸீர் கலையின் பல்வேறு அம்சங்களை விளக்குவதோடு பல்வேறு தப்ஸீர்கள், முபஸ்ஸீர்கள் பற்றிய விளக்கத்தையும் அளிக்கின்றது. திருக்குர் ஆனும் மேற்கத்தைய அறிஞர்களும் என்ற அத்தியாயம் அல்-குர்-ஆனைப் பற்றிய மேற்கத்திய அறிஞர்களின் ஆய்வினை விமர்சனரீதியாக ஆராய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23281).

ஏனைய பதிவுகள்