சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
xiv, 102 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18.5×13 சமீ.
ஏட்டுப் பிரதிகளான கட்டு வைத்தியம், சித்த மருத்துவ வாகடம் ஆகிய இரண்டு நூல்களையும் அச்சிட்டுப் பிரசுரித்த நூலாசிரியர் சித்த மருத்துவ கலாநிதி சே.சிவசண்முகராஜா தனது மற்றுமொரு முயற்சியாக இந்நூலைப் பதிப்பித்துள்ளார். கந்தரோடை மணி மந்திர வைத்திய பரம்பரையில் வந்த பிரம்மஸ்ரீ கார்த்திகேச ஐயர் சுப்பிரமணிய ஐயர் அவர்களின் காலம் 1880-1935 ஆகும். 55 வயதில் அவர் மறையும் வரை கந்தரோடையில் சித்தவைத்தியராகப் பணியாற்றியவர். அவர் பயன்படுத்திய மருந்துசெய் வாகடச் சுவடிகளை பாதுகாத்து வைத்திருந்த அவரது மூத்த புதல்வரான பிரம்மஸ்ரீ சு.சேதுமாதவ ஐயர் வழியாக அன்னாரின் புதல்வரான நூலாசிரியர் பெற்று அவற்றை நூலுருவில் பதிப்பித்துள்ளார். கோரோசனை மாத்திரை, கிரந்திக் கோரோசனைக் குளிகை, கிரந்தி வாய்வுக் கோரோசனைக் குளிகை, சந்தனாதிக் குளிகை, இருமலுக்கு மருந்து, கட்டு அமர, கட்டுக்குப் பூச்சு, சித்தாதி எண்ணெய், சர்வசங்காரக்கொதியெண்ணெய் என இன்னோரன்ன 223 மருந்துகளின் தயாரிப்பு மற்றும் மருத்துவ குணங்கள் என தனித்தனித் தலைப்புகளில் தகவல்களைப் பதிவுசெய்திருக்கிறார். நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 131313).