மலரா (இயற்பெயர்: புஷ்பலதா லோகநாதன்). கல்முனை: திருமதி புஷ்பலதா லோகநாதன், குருக்கள் வீதி, பாண்டிருப்பு 02, 1வது பதிப்பு, ஜுன் 2009. (வத்தளை: பேஜ் அன்ட் இமேஜ், 202/2B, ரோயல் பேர்ள் கார்டன்ஸ்).
108 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 200., அளவு: 17.5×11.5 சமீ., ISBN: 978-955-51741-0-7.
கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த வைத்தியரான இக்கவிஞரின் முதல் முயற்சி இதுவாகும். போர், சுநாமி, வறுமை போன்றவற்றினிடையான பொது மக்கள் மீள்கட்டுமானத்தில் தன்னை முற்றிலுமாய் ஈடுபடுத்திக்கொண்டுள்ள சமூக செயற்பாட்டாளர். கிழக்கு மாகாணத்தின் கடந்த இருபதாண்டுக்கால அரசியல், சமூகவியல், ஆயுதக் கலாச்சாரம், ஆகியவற்றின் அத்தனை மோசமான அனுபவங்களையும் எதிர்கொள்ள நேர்ந்த மனிதநேயக் கவிஞர் இவர் என்று சரிநிகர் 2007இல் இவரை அறிமுகம் செய்திருந்தது. இருபது வருடங்களாகத்தான் எழுதிச்சேர்த்து வைத்திருந்த கவிதைகளுடன் இத்தொகுதியில் வாசகர்களைச் சந்திக்கிறார். மூன்றாவது மனிதன், சரிநிகர், உயிர் எழுத்து, ஊடறு, பிரவாகம், மை – கவிதைத் தொகுதி, என்பவற்றில் இவரது கவிதைகள் களம்கண்டுள்ளன. பெண்மையின் மென்மையான உணர்வுகளை அகம்சார்ந்த இக்கவிதைகளில் பரவவிட்டுள்ளார். உரத்தகுரலில் அல்லாது காதோரம் கிசுகிசுக்கும் கவிதைகள் இவை. கலியுகமல்ல என்ற கவிதை போர்க்காலத்தின் கோர நிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. நாணலாய் நான் என்ற கவிதை மென்மையான காதலை உணர்த்துகின்றது. சுனாமி பற்றிய கவிதையில் காலம் கடந்தும் சுநாமியின் தாக்கம் எத்துணை வலிதாக மனித மனங்களைக் கௌவிநிற்கின்றது என்பதைப் புரியவைக்கின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 217229).