செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, 2011. (சென்னை: சிவம்ஸ்).
192 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 18×12 சமீ.
சமூகவியல் கற்கும் நிர்மலாவின் தம்பி மாதவன் நண்பரோடு இணைந்து, பெண்ணியம் சார்ந்து ஆய்வு செய்கின்றனர். அவர்களது பேராசிரியர் இயற்கையோடு பெண்ணினத்தைப் பிணைக்கும் தனிக்கொள்கையினர். மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இயற்கையில் கிடைத்த உணவாக பழம் கிழங்குவகைளை உண்டுவாழும் காலம் வரை தாய்வழிச்சமூகமே நிலவிவந்துள்ளது. நில உற்பத்தி விளைச்சலில் மனித இனம் நிலைபெற்று வாழும் காலத்தில் வேலைப்பிரிவினையுடன் பெண் அடிமைப்பட்டாள். தந்தைவழிச் சமூகம் குடும்ப அமைப்புடன் ஆரம்பித்தது என்கிறான் மாதவன். உலகின் முதலாவது வேலைப்பிரிவினையுடன் அடிமைப்பட்ட பெண்ணினம் குடும்பச் சிறையிலிருந்தே அடிமை நிலையை எதிர்த்து உள்ளிருப்புப் போராட்டமாகத் தொடர்வதால் குடும்ப வாழ்வில் அமைதியில்லை. ஆண், பெண் எதிர்மறையின் ஒற்றுமையும் போராட்டமும் இன்றளவில் தொடர்கிறது. இதுவே மார்க்சியத்தின் முதற் கோட்பாடு-முரண்பாடு எனக்கூறப்படுகின்றது. இழந்த உரிமைகளை மீண்டும் பெற தனித்தனியாக குடும்பத்துள் இருந்து, சிறை காப்பாளருக்கு எதிராக உள்ளிருப்புப் போராட்டம் உலகெங்கும் தொடர்கிறது. பெண்ணியம் என்பது வெளிப்படையான முதன்மைப் போராட்ட அமைப்பு. பெண்ணியவாதியான பூங்கோதை தன் குடும்ப நெருக்கடியால் வங்கி மனேஜர் செல்லப்பனை மணக்க நேரிடுகிறது. ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகிறாள். தெருவில் காண்பவனுக்குப் பயப்படவில்லை. வீட்டுக்காரனுக்கு அஞ்சுவதாக தோழி நிர்மலாவுக்குக் கூறுகிறாள். முதலாளித்துவ இழப்பை ஈடுகட்ட பெண்ணியத்தை இயந்திர உற்பத்தியில் ஈடுபடுத்தி கூலி வழங்கியதோடு கல்வி, சமூக வாழ்விலும் மேம்படுத்தியது. குடும்பச் சிறைகளில் ஒடுக்கப்பட்டிருந்த பெண்ணினம் தாம் இழந்த உரிமையைப் பெறும் நோக்கில் முன்னேறி வரும் பாங்கை இந்நாவலின் உரையாடல்கள் தொட்டுக்காட்டுகின்றன. இவ்வளர்ச்சியை மார்க்சியம் கூறும் முதல் கூற்றாகிய எதிர்மறைகளின் ஒற்றுமையும் போராட்டமும் என்ற கூற்றை அறிவுபூர்வமான உரையாடல்கள் மிகுந்த இந்நாவல் தொட்டுக்காட்டும்.