தேவகாந்தன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (சென்னை 600077: மணி ஓப்செட்).
999 பக்கம், விலை: இந்திய ரூபா 975., அளவு: 24×15.5 சமீ., ISBN: 978-93-82033-74-5.
கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக வன்முறைகளாலும் போர்களாலும் சூழப்பட்ட ஈழத் தமிழர்களின் முடிவின்றித் தொடரும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளும் நாவல் இது. ஈழப் போரின் முக்கியமான இருபதாண்டு கால வரலாற்றின் பின்னணியில் வட இலங்கையின் மிகச் சிறிய தீவொன்றில் வாழும் எளிய மனிதர்கள் தம் வாழ்வையும் கனவுகளையும் இழப்பதைப் பற்றிய இந்தக் கதை போர் ஏற்படுத்தும் உருக்குலைவுகளைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமல் அதன் அறத்தையும் அரசியலையும் விசாரணைக்குட்படுத்துகிறது. போரினால் இழுத்துச் செல்லப்பட்டுச் சிதறடிக்கப்பட்ட தம் மண்ணின் புதல்வர்களைப் பின்தொடர்ந்து செல்லும் நயினாதீவுப் பெண்களின் அலைக்கழிப்புக்களை அவர்களது கண்ணீராலும் பெருமூச்சுக்களாலும் வெதுவெதுப்பாக்கப்பட்ட சொற்களின் வழியே முன்வைக்கும் இந்த நாவல் போரின் வடுக்களை ஏற்ற பெண் உலகின் குரலாக விரிவுகொள்கிறது. போரினால் பொருட்படுத்தப்படாத தாய்மையின் கசிந்த கண்களினூடாக இனப்பிரச்சினையின் வேர்களை ஆராய்கிறது. காதலாலும் தியாகத்தாலும் நிரப்பப்பட்ட தன் இதயத்தைப் போரின் கருணையற்ற உள்ளங்கைகளில் வைத்து அதன் துடிப்பைக் கேட்க வற்புறுத்தும் பெண்மையின் இக்குரல் இறுதிப் போருக்குப் பிந்தைய இனப்பிரச்சினை பற்றிய உரையாடல்களில் புறக்கணிக்கப்பட முடியாத ஒன்றாகத் தன்னை நிறுவிக்கொள்கிறது. இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமாக நிலைபெற்றுவிட்ட ஈழப்போரின் குருதி தோய்ந்த சுவடுகளைப் பின்தொடர்ந்து செல்லும் ஒரு கலைப்படைப்பு தன் வரலாற்றுக் கடமையை எவ்வளவு அர்த்தமுள்ள வகையில் ஆற்ற முடியும் என்பதற்கு இந்த நாவல் ஒரு திடமான சான்று. இலங்கையின் வடமாகாணம் சாவகச்சேரியில் பிறந்த தேவகாந்தன், 1968இல் ஈழநாடு தேசிய நாளிதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். 1974வரை அந்நிறுவனத்தில் கடமையாற்றிய பின் இலங்கை யுத்த நிலைமை காரணமாகத் தமிழ்நாட்டுக்கு 1984இல் புலம்பெயர்ந்தவர். தற்போது கனடாவில் ரொரன்ரோவில் வாழ்ந்துவரும் தேவகாந்தனின் கனவுச்சிறை முன்னர் ஐந்து பாகங்களில் தனித்தனி நூல்களாக வெளிவந்திருந்தன. திருப்படையாட்சி (1998), வினாக்காலம் (1998), அக்னி திரவம் (2000), உதிர்வின் ஓசை (2001), ஒரு பதிய காலம் (2001) ஆகிய ஐந்து தலைப்புகளில் இவை வெளிவந்திருந்தன. இப்பதிப்பு அவை அனைத்தையும் திரட்டிய தனி நாவலாக அமைந்துள்ளது.