வை.க.சிற்றம்பலம். யாழ்ப்பாணம்: இணுவில் இந்து மகாசபை, இணுவில், 1வது பதிப்பு, 1992. (ஏழாலை: மஹாத்மா அச்சகம்).
14 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 11.5×13 சமீ.
யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே சிவகாமி அம்மன் கோயில் முக்கியமான ஒன்று. இது கிழக்கு இணுவில் பகுதியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்து அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. யாழ்ப்பாண அரசு அமைந்த தொடக்க காலத்தில், நாட்டின் பல பகுதிகளுக்குப் பொறுப்பாக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தலைவர்களில் ஒருவன் குடியேறிய பகுதியாக, இணுவில் குறிப்பிடப்படுகின்றது. இவன் தமிழ் நாட்டின் திருக்கோவிலூரைச் சேர்ந்த பேராயிரவன் என்று யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இவன் சிதம்பரத்திலிருந்து சிவகாமியம்மை திருவுருவத்தை வரவழைத்துத் தான் வாழ்ந்த இடத்தில் இச்சிவகாமியம்மை ஆலயத்தை அமைத்தான் எனவும் அவ்விடம் அதனால் சிதம்பர வளவு என அழைக்கப்பட்டதெனவும் செவிவழிச் செய்திகள் சொல்கின்றன. இரட்டைமணிமாலை என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. மணிகளைக் கோர்ப்பது போல் வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளால் அல்லது வெண்பா, விருத்தப்பா என்னும் பாவகைகளால் அமையும் இந்த இலக்கியவகை அந்தாதியாகவும் அமைந்திருக்கும். இப்பக்தி இலக்கியத்தின் ஆசிரியரான முதுபெரும்புலவர் வை. க. சிற்றம்பலம் இணுவில் கிராமத்தில் 1914ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ம் திகதி பிறந்தவர். இணுவிலில் பிறந்தாலும் அளவெட்டி மண்ணில் மணம் முடித்து அளவெட்டியிலேயே நிரந்தரமாக வாழ்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12886).