சி.ஆ.கந்தையா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: சி.ஆ.கந்தையா வெளியீடு, 12 ஏ, முதலாம் சப்பல் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1974. (கொழும்பு 13: இரஞ்சனா அச்சகம், 98, விவேகானந்தர் மேடு).
18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ.
பழங்காலப் புலவர்களால் கலிவெண்பாவிற் பாடப்பெற்ற பதிகங்களின் தொகுப்பு. புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் முகவுரையைக் கொண்டது. ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் திருக்கோணமலை நகரின் மையப்பகுதியில், பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையிலும் திருகோணமலை தொடருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். இவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகங்கள், தகளி, வாகனம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு முதலாம் இராசேந்திர சோழன் காலமாகிய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியர் செ. குணசிங்கம் குறிப்பிட்டுள்ளார். பங்குனி உத்தரத்தைத் தீர்த்தோற்சப நாளாகக்கொண்டு பத்து நாட்கள் மகோற்சபம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் இரதோற்சபம் நடைபெற்று, பங்குனி உத்தரத்தன்று அம்பாள் கோணேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் கோணமலையின் அடிவாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தமாடுவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24632).