ச.வே.பஞ்சாட்சரம். யாழ்ப்பாணம்: கஜராம், மகிழினி, காவேரி, பாவிழி, மேலைவீதி, செகராசப் பிள்ளையார் கோவில், இணுவில் மேற்கு, 1வது பதிப்பு, 2017. (கனடா: கிரபிக்லேண்ட் அச்சகம், 285 புரொகிரஸ் அவென்யு, ஸ்காபுரோ).
31 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
இணுவிலைச் சேர்ந்த பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் ஓர் அருட்கவி. இலங்கை, தமிழகம், பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளிலுள்ள பல்வேறு ஆலயங்களின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பாமாலைகளை இயற்றிப் பாடியுள்ளார். புராணம், திருப்பள்ளி எழுச்சி, பிள்ளைத் தமிழ், தூது, துதி, அந்தாதி, பதிகம், சிந்து, வெண்பா, இரட்டைமணிமாலை, மும்மணிக் கோவை, நான்மணி மாலை, என ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய வடிவங்களில் இவர்களது பக்தி இலக்கியங்கள் அமைந்துள்ளன. இந்நூலில் நயினை நாகபூசணி அம்மன் பேரில் பாடிய நான்மணிமாலை என்ற பிரபந்தம் இடம்பெற்றுள்ளது. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், மணிமேகலை காவியம் தோன்றிய கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட பழமை வாய்ந்த புனிதத் தலமாகும். மணிமேகலாத் தெய்வத்துடனும் புத்தபீடிகையுடனும் புனித கோமுகித் தடாகத்துடனும் தொடர்புடையதாக மணிபல்லவம் என வழங்கப்பட்ட இத்தலம் காலம் காலமாக ஈழத்தவராலும் தமிழக மக்களாலும் வழிபாடு செய்யப்பட்டு வந்ததாக வரலாறு உள்ளது. இந்நான்மணிமாலையில் பண்டிதர் அவர்கள் பல்வேறு வரலாற்றுத் தகவல்களை கவிஞர் விபரிக்கிறார். போர்த்துக்கீசரின் காலத்தில் ஆலயம் இடிக்கப்பட்டு அதன் கற்கள் சங்குமாவடியில் அவர்கள் கட்டிய கோட்டைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். கடலில் எறியப்பட்ட சிலைகளை பாதுகாக்க ஊரவர்கள் பட்ட பாடுகள் இப்பிரபந்தத்தில் உணர்வுபூர்வமாக வடிக்கப்பட்டுள்ளது.