சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: குபேந்திரா பதிப்பகம், கூனன் தோட்டம், சமரபாகு, 1வது பதிப்பு, ஜுன் 2016. (யாழ்ப்பாணம்: அன்றா பிறின்டேர்ஸ், 356 ஏ, லக்ஸன் பிளாசா கட்டிடம், கஸ்தூரியார் வீதி).
(2), ii, 64 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-43151-3-6.
கஜல் கவிதைகள் அரபு மொழியில் தோற்றம் பெற்றவை. ‘காதலியுடன் பேசுதல்’ என அர்த்தம் தரும் இவ்வகைக் காதல் கவிதைகளின் பரீட்சார்த்த உருவாக்கத்தை இங்கு கவிஞர் உதயகுமார் மேற்கொண்டுள்ளார். அப்துல் ரகுமானின் ‘மின் மினிகளால் ஒரு கடிதம்’ என்ற கஜல் கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து தமிழ்க் கவிதை உலகில் இவ்வகைக் கவிதைகள் பரவலாக வெளிவரத்தொடங்கியிருந்தன. இலங்கையின் போர்க்காலச் சூழலில் காதல் கவிதைகளின் வரவு மிகவும் அருகியிருந்தது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஈழத்துக் கவிஞர்களிடம் தற்போது காதல் கவிதைகள் மீள்வரவாகியுள்ளன. அவ்வகையில் இக்கவிதைத் தொகுதி முக்கியமான ஒன்றாகவுள்ளது. பக்கங்கள் தோறும் பெண்களின் புகைப்படங்களுடன் காதல் கவிதை பேசுகின்றது. ஆறு, நான்கு, எட்டு வரிக் கவிதைகளாகக் கலந்து இக் கஜல் கவிதைகள் இடம்பெறுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 250626).