11712 விடைக்குள் வராத வினாக்கள்.

தர்காநகர் ஸபா (இயற்பெயர்: தாஜ்தீன் முஹம்மட் ஸபா). தர்க்காநகர் 12090: படிப்பு வட்டம், இல. 9 டாக்டர் செய்க் பாஸி மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1999. (பேருவளை: மாஸ் கிரப்பிக்ஸ் மீடியா, 63, பள்ளிவாசல் வீதி).

xvii, 77 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 18.5×12.5 சமீ.

தர்கா நகர் ஸபா என ஊரின் பெயரோடு தன்னை இணைத்துக் கொண்டு எழுதும் தாஜ்தீன் முஹம்மட் ஸபா, தர்கா நகரைச் சேர்ந்த, யூஸ_ப் மரிக்கார் தாஜ்தீன், அப்துல் கபூர் மரிக்கார் ஸித்தி ஸாஹிதியா தம்பதிகளின் மூத்த மகனாவார். 1973ம் ஆண்டு இலங்கை வங்கியில் இலிகிதராக பணியில் சேர்ந்த இவர் சுமார் 39 வருட காலமாக இலங்கை வங்கியில் வேலை பார்த்தார். தொழில்சார் ரீதியில் சிறந்ததொரு வங்கியியலாளரான இவர், இலங்கை வங்கியின் சென்னை கிளையில் பணியாற்றியவர்.  இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் சிரேஷ்ட அங்கத்துவராகவும், லண்டனில் இயங்கும் சர்வதேச தொழில்சார் முகாமையாளர் நிறுவனத்தின் அங்கத்தவருமானவர். தர்கா நகர் ஸாஹிரா கல்லூரியில் ஆரம்பக் கல்வியை பெற்ற இவர் க.பொ.த உயர்தரம் வரை இக்கல்லூரியிலேயே கற்றவர்.

கல்லூரியின் தமிழ் மற்றும் இஸ்லாமிய மன்றங்களின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை வகித்த இவர் பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தார். தினகரன் பத்திரிகை இவரின் கதை, கட்டுரை மற்றும் கவிதைகளை ஏற்றுப் பிரசுரித்து இவருக்கு களமமைத்துக் கொடுத்தது. 1970 ஆம் ஆண்டுகளில் இவரது ஆக்கங்கள் பொது ஊடகங்களில் வெளிவந்தன. 2002ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய, தமிழ் இலக்கிய மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக இவரைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. கவிஞர் தர்காநகர் ஸபாவின் கால்நூற்றாண்டு காலத்தின் கவியாக்கங்களைத் திரட்டிப் பதிவுக்குள்ளாக்கும் முயற்சியே இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27226).

ஏனைய பதிவுகள்