வீணைமைந்தன் (இயற்பெயர்: கே.ரி.சண்முகராஜா). கனடா: வீணைக்கொடி வெளியீட்டகம், 425, Boulvard Hymam, Dollard-Des-Ormeaux (Quebec), H9B 1M1, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (யாழ்ப்பாணம்: சிவராம் பதிப்பகம், 20, கல்லூரி வீதி).
xviii, 140 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-42202-2-5.
காங்கேசன்துறையிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்து சென்று வாழும் ஆசிரியரின் தாயகப் பிரதேச வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பு. டொரன்ரோவில் சூரியன் இதழிலும் பின்னர் மொன்ரியலில் இருசு இதழ்களிலும் வெளியான கட்டுரைகள் இங்கு விரிவாக்கப்பட்டு நூலுருவில் வெளிவந்துள்ளன. பிறந்த பதியினும் சிறந்ததொன்றில்லை என்னும் தலைப்பில் சூரியன் இதழில் இவர் முதலில் எழுதிய தொடரில் காங்கேசன்துறை பற்றிய வரலாற்றுப் புதினங்களையும் தன்னோடு தொடர்ந்து வந்த நினைவனுபவங்களையும் எழுதிய இவர், தொலைந்துபோன வசந்தங்கள் என அவற்றை விரிவான நெடுந்தொடராக மீண்டும் 2009 ஜுலையில் மொன்ட்ரியல் இருசு பத்திரிகையில் சுமார் எட்டு மாதங்கள் எழுதிவந்தார். இத்தொடர் கட்டுரைகளே இங்கு நூலுருவாகியுள்ளன. தனது தாயகப் பூமியாகிய வலி-வடக்கின் வாழ்வு ஈந்தளித்த வல்லமைகளும் அதனை இழந்த துயரம் தரும் வலிகளும் இந்த நூலின் பிரதான உள்ளடக்கமாகின்றது. பிள்ளைப் பருவம் முதலாக தமக்கு வாய்த்த சமூகமயமாக்கச் சூழலின் அழகிய பக்கங்களையும் சவாலான நிலைமைகளையும் இந்நூலில் அழகிய அனுபவப் பதிவுகளாக்கியிருக்கிறார். இது ஆசிரியரின் தனிப்பட்ட கதையாக-சுய அனுபவங்களாக அமைந்துவிட்டபோதிலும் ஒரு காலத்தின் கதையாகவும் பண்பாட்டின் வரலாறாகவும் விரிந்து பொருள் தருகின்றது.