சி.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: சி. கணபதிப்பிள்ளை, தமிழாசிரியரும் சோதிடரும், அட்டப்பள்ளம், நிந்தவூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1978. (யாழ்ப்பாணம்: விபுலானந்த அச்சகம்).
(2), 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
மட்டக்களப்பின் கண்ணகி வழிபாடு பற்றிய ஆய்வு இதுவாகும். பத்தினி வழிபாடு என்னும் கண்ணகி வழிபாடு, ஈழநாடு முழுவதும் பிரபலம் பெற்றுள்ளது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வழிபாட்டு முறைகள் இன்றும் பெருவழக்கிலுள்ளன. கண்ணகி வழிபாட்டின் பக்திப் பிரவாகத்தில் திளைத்து விளையாடிய புலவர்கள் பலர் பல சந்தர்ப்பங்களில் பாடிய பக்திப் பாடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. சில செல்லரித்து மறைந்தும் விட்டன. அவற்றுள்ளே காவிய வகைகளான எழுச்சிக் கவிதைகள் பக்திப் பரவசத்தில் மக்களை ஆற்றுவதில் ஈடு இணையற்றன. கண்ணகி அம்மன் ஊர்சுற்றுக் காவியத்திலே 15 தலங்கள்மீது பாடப்பெற்ற காவியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவரது முன்னைய நூலான மகாமாரித் தேவி திவ்வியகரணியில் இத்தகைய எட்டுக் காவியங்கள்பற்றி ஆசிரியர் விளக்கி அவற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இந்நூலில் மேலும் ஏழு காவியங்களைத் தேடிச் சேகரித்து பதிவுசெய்துள்ளார். ஊர்சுற்றுக் காவியம், காரைதீவுக் கண்ணகை அம்மன் காவியம், கோராவெளி அம்மன் காவியம், தம்பிலுவில் மழைக் காவியம், மண்முனைக் கண்ணகை அம்மன் காவியம், புதுக்குடியிருப்புக் கண்ணகை அம்மன் காவியம், செட்டி பாளையக் கண்ணகை அம்மன் காவியம் ஆகிய ஏழு காவியங்களும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2409. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004761).