12166 – பிள்ளையார் துதியும் ஒளவையார் மதியும்.

வீ.வ.நம்பி (இயற்பெயர்: வீ.வ.நல்லதம்பி). கனடா: கனடா இந்து மாமன்றம், 1வது பதிப்பு, ஜுலை 1999. (கனடா: ரோயல் கிராப்பிக் நிறுவனம்).

vi, 102 பக்கம், விலை: கனேடிய டாலர் 2., அளவு: 21×13.5 சமீ.

திருமுறைகளில் வரும் பாடல்களுள் பிள்ளையாரைச் சிறப்பாகத் துதிக்கும் பாடல்களையும் தமிழ் மூதாட்டி ஒளவையார் பாடிய அறநெறிப் பாடல்களையும் தொகுத்துத் தரும் முயற்சியாக இந்நூல் வெளிவந்துள்ளது. கனடா, ஸ்காபரோவில் 30.07.1999இல் நடைபெற்ற ஏழாவது உலகச் சைவப்பேரவை மாநாட்டின்போது வெளியிடப்பட்டது. பண்டிதர் நல்லதம்பி, தீவகத்தில் சேர்மன் நல்லதம்பி என்று யாவராலும் அன்பாக அழைக்கப்பட்டவர். மிக இளம் வயதிலேயே சமூகப் பணிகளில் முன்னின்றுழைத்த இவர் முப்பதாவது வயதிலேயே புங்குடுதீவின் கிராமசபைத் தலைவராகத் தெரிவாகிப் பணியாற்றியவர். யாழ். மாவட்ட கிராமசபைகளின் சமாசத் தலைவராகவும் (1954) தெரிவு செய்யப்பட்டு யாவரினதும் மதிப்பினைப் பெற்றவர். அரசியல் துறையிலும் ஈடுபட்டுழைத்தவர். 1956ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின்போது வடபகுதியில் லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் ஊர்காவற்றுறைத் தொகுதி வேட்பாளராக இவர் போட்டியிட்டார். தீவுப்பகுதி தமிழாசிரியர் சங்கத் தலைவராக, அகில இலங்கை பெற்றோர் ஆசிரியர் சங்க சம்மேளனத் தலைவராக, யாழ். மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாச உபதலைவராகவும் பணியாற்றியவர். 1973ஆம் ஆண்டு புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையேற்று அங்கு க.பொ.த உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க ஆவன செய்தார். கவிதைகள், சிறுவர் பாடல்கள் பலவும் இவர் எழுதியுள்ளார். இறுதிக் காலத்தில் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வசித்தபோதும் சைவசமயப் பணிகளில் ஈடுபட்டுழைத்தார். கனடா இந்து மாமன்றத்தை நிறுவிய பெருமையும் இவருக்குண்டு. 1999ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 23ஆம் திகதி இவருக்குக் கனடாவில் இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருது மாநகர மேயரால் வழங்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34800).

ஏனைய பதிவுகள்