12214 – பண்டைத் தமிழ்ச் சமூகம்: வரலாற்றுப் புரிதலை நோக்கி.

கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 600002: மக்கள் வெளியீடு, 49, உனிசு அலிசாகிப் தெரு, எல்லிசு சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2003.(சென்னை 600005: தேவா ஆப்செட்).

176 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21X14 சமீ.

மே.து.ராசுகுமார், ரா.வசந்தா ஆகியோரை பொதுப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளியிடப்பட்ட இந்நூல் 1998இல் தமிழகத்தில் ஆங்கிலத்தில் வெளியான Studies in Ancient Tamil Society என்ற பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலின் தமிழாக்கமாகும். பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதிய ஐந்து கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. நூலுக்கான பதிப்புரையை மே.து.ராசுகுமார் எழுதியிருக்கிறார். முன்னுரையாக ‘ஐராவதம் மகாதேவனின் ஆய்வு நிறைவும் சங்க கால வரலாற்று மீள்பார்வைக்கான தேவைகளும்’ என்ற கட்டுரை உள்ளது. ‘திணைக் கோட்பாட்டின் சமூக அடிப்படைகள்’ என்ற முதலாவது கட்டுரையை பேராசிரியர் நா.வானமாமலை, பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் ஆகியோர் தமிழாக்கம் செய்துள்ளனர். பிற கட்டுரைகளை பேராசிரியர் செ.போத்திரெட்டி தமிழாக்கம் செய்துள்ளார். ‘பூர்வ காலத் தமிழ் நாட்டில் அரசமைப்பு உருவாக்கம்’ என்ற கட்டுரையானது, ஆட்சி அதிகாரம் உடையோரைக் குறிக்கும் சங்க காலத்துச் சொற்களை ஆதாரமாகக் கொண்டு அக்காலத்து அரச உருவாக்கம் பற்றிய பூர்வாங்க உசாவலாக அமைகின்றது. ‘பண்டைய தமிழ் நாட்டில் உயர்குடி ஆதிக்க மேட்டிமையின் வளர்ச்சி’ என்ற கட்டுரை பண்டைய தமிழ் நாட்டில் சமூக அடுக்கமைவுகளின் தோன்று நிலை குறித்த ஒரு ஆய்வாகும். ‘சங்க இலக்கியமும் தொல்லியலும்’ என்ற கட்டுரை 1975இல் வெளிவந்த ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் சேவைநயப்பு Felicitation மலரில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம். ‘முல்லைத் திணைக்கான ஒழுக்கம்’ என்ற கட்டுரை, அந்நிலத்துக்கான பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய மானுடவியல் முக்கியத்துவம் குறித்த ஒரு பகுப்பாய்வாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36323. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004496).

மேலும் பார்க்க: 12049, 12089

ஏனைய பதிவுகள்