ஏ.எஸ்.பாலசூரிய (ஆங்கில மூலம்), M.H.M.யாக்கூத், M.P.M.M.ஷிப்லி, M.H.M.ஹஸன் (தமிழாக்கம்), மா.செல்வராஜா (பதிப்பாசிரியர்). மகரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1994. (மகரகம: வெளியீட்டுத்துறை, தேசிய கல்வி நிறுவகம்).
iv, 284 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 955-597-223-0.
Conflict Management in Schools என்ற நூலை ஏ.எஸ்.பாலசூரிய அவர்கள் யூனிசெப் நிறுவனத்தின் Peace Education Project என்ற சமாதானக் கல்விச் செயற்திட்டத்தின் கீழ் எழுதியிருந்தார். இந்நூல் அந்த ஆங்கில மூல நூலின் தமிழாக்கமாகும். பாடசாலை நிர்வாகச் சூழலில் ஒவ்வொருவரது கருத்துக்களுக்கும் இடையே வேறுபாடுகள் காணப்படுவது தவிர்க்கமுடியாததாகும். இவ்வாறான வேறுபாடுகள் காரணமாக அவர்களிடையே முரண்பாடுகள் தோன்றும் வாய்ப்புக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. எமது கல்விச் சமூகம், விஞ்ஞான, தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த நிலையை எட்டிப்பிடித்துள்ள போதிலும், அதற்கு இயைய உளரீதியிலும், ஆன்மீகரீதியிலும், ஒழுக்கவியல் சார்ந்தும் விருத்தியடையாத நிலையே ஆங்காங்கே காணப்படுகின்றது. இச்சமூகத்தில் பாடசாலை மட்டத்தில் தனியாள்களுக் கிடையிலான இம்முரண்பாடுகள் மிக வலிமையுடனும் சிக்கலான விதத்திலும் இடம்பெறுவதைக் காணமுடிகின்றது. முரண்பாடுகளை முகாமைசெய்தல் என்னும் புதுத்துறை தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளில் சான்றோர் இன்று ஈடுபட்டு வருகின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிபரும் ஆசிரியர்களும் எவ்வாறு முரண்பாடுகளை அறிவுபூர்வமாகவும், நியாயபூர்வமாகவும் எதிர் கொள்ளவேண்டும் என்பது தொடர்பான தெளிவான விளக்கத்தை இந்நூல் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25487).