ஞானம் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
viii, 128 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21 x 14.5 சமீ., ISBN: 978-955-8354-79-7.
புத்தர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் நேபாளத்தில் தொடங்கும் இந்நாவல் அவரின் ‘தந்ததாது’ பாதுகாக்கப்பட்டுவரும் கண்டியிலே நிறைவு பெறுகின்றது. நாவலின் புதிய விரிவுகளின் வழியே உறவாடும் ஞானம் பாலச்சந்திரனின் இப்படைப்பு, இலக்கியவெளியில் இன்று மறக்கப்பட்டுவிட்ட ‘சித்திரக்கவிகள்’, அதில் உள்ளடங்கிய ஆழ்ந்த கருத்துக்கள், புத்தரின் புனிதச் சின்னமான தந்த தாதுவின் வரலாற்றுப்பதிவுகள், இன்றைய நவீன எண்ணிமஃ கணனி யுகத்துடன் இணைந்த புலனாய்வின் நீட்சிகள் என்பவற்றோடு சுவையானதொரு துப்பறியும் நாவலாக விறுவிறுப்புடன் விரிகின்றது. யாவும் கற்பனை என்றில்லாது, அறிவியலை மக்களிடம் கொண்டுசேர்க்கும் ஒரு ஊடகமாக இந்நாவலை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். முன்னதாக இவர் எழுதிய பாரிய கவித் தொகுப்பு நூலான ‘சித்திரக்கவிகள்’ என்ற இலக்கிய நூலில் தொகுக்கப்பட்டிருந்த நம்முன்னோர் எழுதிய சித்திரக்கவிகள் பற்றிய சிக்கலான புராதன வரலாற்றை மக்களிடம் எடுத்துச்சொல்வதற்கானதொரு எளிமைப்படுத்தப்பட்ட முன்னுரையாகவும் இந்நாவலை நாம் கொள்ளலாம். ‘இந்நாவல் கதையுரைப்பின் வடிவம் புனைவு மற்றும் புனைவு அல்லாதது என்ற இரண்டினுக்குமிடையேயுள்ள எல்லைகளைத் தகர்த்து விடுகின்றது. இந்த ஆக்கத்தில் இடம்பெறும் அமைவிடங்களும் நூல்களும் நிஜமானவையென்றும், பாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையானவை என்றும் கூறப்படுதல், இருநிலைத் தொடர்பு சார்ந்த பிரிகோடுகளின் உள்ளே நிகழும் ஊடாட்டங்களைக் குறிப்பிடும் முற்கோப்பாகவுள்ளது. புனைவில் ஆவணங்களை உட்செலுத்தும் போதும் மறுபுறம் ஆவணங்களில் புனைவை உட்செலுத்தும்போதும், அது ஆவணப் புனையமாக மாற்றம் பெறும். ஆவணத்தை உட்புகுத்துகையில் புலமை நேர்மை என்பது பராமரிக்கப்படுதல் இந்த ஆக்கத்துக்குரிய தனித்துவம் எனலாம்’ என்ற பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களின் அணிந்துரை வரிகள் இந்நாவல் பற்றிய பார்வையை எமக்கு விரிவுபடுத்துகின்றன.