12908 – நாவலர் சிந்தையும் செயலும்.

இரா.வை.கனகரத்தினம் (மூலம்), ஸ்ரீ பிரசாந்தன், பா.சுமன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல. 36, நந்தன கார்டின், இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 197 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21 x 14.5 சமீ., ISBN: 978-955-659-542-0.

பேராசிரியர் இரா.வை.கனகரத்தினம் அவர்கள் நாவலர் பணிகளைத் தனது வாழ்நாள் ஆய்வுப் பொருளாக வரித்துக்கொண்டவர். நாவலர் மீதும் அவரது பணிகள் மீதும் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தவர். அதனை எழுத்தின் வாயிலாகவும் பேச்சின் வாயிலாகவும் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தவர். இந்தப் பின்புலத்தில் அமரர் பேராசிரியர் இரா.வை.கனகரத்தினம் அவர்கள் நாவலர் பற்றி ஆங்காங்கே இதழ்களில் எழுதி வெளியிட்ட கட்டுரைகளையும் கையெழுத்துப் பிரதியாக எழுதி வைத்திருந்த சில கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்தளிக்கும் முயற்சியாகவே இத்தொகுப்புநூல் வெளிவருகின்றது. நாவலர் பெருமானின் சிந்தனைகள், சைவசித்தாந்த மெய்யியலில் ஆறுமுக நாவலரின் பங்களிப்பு, ஆறுமுக நாவலரின் சமய, சமுதாயப் பணிகள், தமிழ்நாட்டில் நாவலரின் சைவசமய முயற்சிகள், நாவலரின் பதிப்புநெறி, ஆறுமுக நாவலரும் காரைதீவு மு.கார்த்திகேயப் புலவரும், நாவலர் பற்றிய ஆய்வின் போக்கு ஒரு மதிப்பீடு, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் ஆய்வடங்கல் ஆகிய எட்டுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக பேராசிரியர் இரா.வை. கனகரத்தினம் அவர்கள் எழுதிய நாவலர் பற்றிய நூல்கள், ஆறுமுக நாவலரின் சமய, சமுதாயப் பணிகள் பிரசுரத்துக்கான பண்டிதமணியின் வாழ்த்துரை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் ஆறுமுக நாவலரைப் பல்வேறுபட்ட கோணங்களிலும் ஆராய்கின்றன. சில அவரது சிந்தனைகளை நோக்குகின்றன. வேறு சில அவரது சமய, சமூக, பதிப்புப் பணிகளை ஆராய்கின்றன. ஒரு கட்டுரை நாவலரையும் கார்த்திகேயப் புலவரையும் இணைத்து நோக்குகின்றது. நூலாசிரியர் அமரர் இரா.வை.கனகரத்தினம் (23.8.1946-24.5.2016) பேராதனைப் பல்கலைக் கழகத்தில் முதுமாணிப்பட்டம் பெற்று, களனிப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் இந்து நாகரிகத்துறையில் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்