12916 – மனிதருள் மாணிக்கம்: அப்துல் அஸீஸ்.

பி.எம்.லிங்கம். கொழும்பு 12: அஸீஸ் மன்ற வெளியீடு, 17, புதிய சோனகத் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).

(8), 190 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 21 x 14 சமீ.

இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்து மறைந்த பெரியார் அப்துல் அஸீஸ் அவர்களின் வாழ்க்கைப் பேரேட்டிலிருந்து வரலாறு தரும் பாடங்கள் சிவலவற்றைப் பதிவுசெய்வதாக இந்நூல் அமைகின்றது. இந்தியாவில் மகாத்மா காந்தி அவதரித்த போர்பந்தரில் பிறந்த அப்துல் அஸீஸ் தனது படிப்பை முடித்துக் கொண்டு தனது தந்தையின் வர்த்தகத்துக்கு உதவும் பொருட்டு இலங்கை வந்த பின்னர், மலையக தோட்ட மக்களோடு தன்னை சங்கமித்துக் கொண்டார். அஸீஸ் அவர்களின் மனிதாபிமானம் தொழிலாளர் வர்க்கத்தினரை மாத்திரமல்ல நாட்டிலுள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரையும் கவர்ந்தமை வியப்புக்குரியதொன்றல்ல. தொழிற்சங்க வரலாற்றை எழுத முற்படும் எவரும் அஸீஸை புறந்தள்ளி அதனை எழுத முடியாது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மேதினத்தில் தொழிலாளருக்கு விடுமுறையுடன் சம்பளம் பெற்றுத் தந்த பெருமை மறைந்த தொழிற்சங்கவாதி அஸீஸ் அவர்களைச் சாரும். காலம் காலமாக அவரின் சேவை முழுவதும், பெருந்தோட்டத் துறைக்கே அர்ப் பணிக்கப்பட்டுள்ளது. அஸீஸ் அவர்களின் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட அப்போதைய மகாதேசாதிபதி சேர். சோல்பரிக்கு எதிராக லங்கா சமசமாஜக் கட்சியுடன் இணைந்து தேசிய சுதந்திரத்துக்காக குரல் எழுப்பினார். அந்தக் காலகட்டமே இலங்கையின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திய வம்சாவளி தொழிலாளர்களின் தேசிய உரிமைகளுக்காக போராடவும் இறப்பர், தேயிலை தோட்டங்களில் உழைத்து வரும் மக்களுக்காக இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கு ஸ்தாப உறுப்பினராக கடமை யாற்றிய பெருமை அஸீஸை சாரும். அத்துடன் இவர்தான் இலங்கை இந்திய காங்கிரஸின் முதலாவது பொதுச் செயலாளராகவும் கடமையாற்றினார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20357).

ஏனைய பதிவுகள்