சேவியர் மார்க் செல்லத்தம்பு (மூலம்), த.ம.பீற்றர் பொன்கலன்ட் (தொகுப்பாசிரியர்). நெடுங்கேணி: த.ம.பீற்றர் பொன்கலன்ட், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1973. (கொழும்பு: அருளொளி அச்சகம்).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 x 13.5 சமீ.
இந்நூல் திரு. சே.மா.செல்லத்தம்புவின் இலங்கைப் பாராளுமன்ற உரைகளின் ஹன்சார்ட் பதிவுத் தொகுப்பாகும். இதில் அரசியல் சாசனம் பற்றி 7.7.1972இல் ஆற்றிய உரை (ஹன்சார்ட் பக்கம் 997-1005), தென்னை ஆராய்சிச் சட்டமூலம் தொடர்பாக 8.10.1971இல் ஆற்றிய உரை (ஹன்சார்ட் பக்கம் 1307-1319), அடக்குமுறை ஜனநாயகமா என்ற தொனிப்பொருளில் 19.09.1971இல் ஆற்றிய உரை (ஹன்சார்ட் பக்கம் 663-675) என்பன இடம்பெற்றுள்ளன. இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சே.மா. செல்லத்தம்பு, 20 அக்டோபர் 1917 இல் பிறந்தவர். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வவுனியா தேர்தல் தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 273 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ் காங்கிரசு வேட்பாளர் தா.சிவசிதம்பரத்தை வென்று நாடாளுமன்றம் சென்றிருந்தார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 1977 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ‘தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்ப தில்லை’ என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்த வேளையில், மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காதமையால், 21.10.1983 அன்று திரு. செல்லத்தம்பு முல்லைத்தீவு தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கையை இழந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10276).