க.நவரத்தினம். தெல்லிப்பழை: ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, 1954. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xv, 103 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 10.50, அளவு: 25 x 19 சமீ.
இந்நூல் ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றப் பிரசுர வரிசையில் முதலாவது வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்தியாவும் இலங்கையும், இலங்கையிற் சிற்ப வளர்ச்சி-1, இலங்கையிற் சிற்ப வளர்ச்சி-2, தாதுகோபங்கள், பௌத்த சிற்ப வடிவங்கள், சைவ சிற்ப ஆலயங்களும் வடிவங்களும், யாழ்ப் பாணத்திற் சைவ ஆலயங்கள், இலங்கை ஓவியங்கள், கலையும் கைத்தொழிலும், இந்திய கலா தத்துவம் ஆகிய 10 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் அநுபந்தமாக கலாஜோதி ஆனந்தக் குமாரசுவாமி அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம், அவர் வெளியிட்ட நூல்கள், அவர் சிறப்பாகச் செய்துள்ள பணிகள், புகழுரைகள் ஆகியன இடம்பெற்றுள்ளன. மேலும் பட விளக்கங்கள், மேற்கொள் நூல்கள், அரும்பொருள் அட்டவணை ஆகிய பட்டியல்களும் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் கந்தையா நவரத்தினம் (1898-1962) யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தனது கல்வியைப் பெற்று, அதே கல்லூ ரியிலேயே 1920ம் ஆண்டு முதல் வர்த்தகத்துறை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் யாழ்ப்பாணத்தின் கலை, நுண்கலை வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளார். ‘தென்னிந்திய சிற்ப வடிவங்கள்’ என்ற பிரபல்யமான நூலின் ஆசிரியரும் இவரே. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2611. பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 7390).