13088 சுவிசேடக் கவிஞன் தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியாரின் நூற்திரட்டு தொகுதி 1.

தஞ்சை வேதநாயக சாஸ்திரி (மூலம்), ஈழத்துப் பூராடனார் (உரையாசிரியர்;), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9).

xxxvi, 256 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 17., அளவு: 21×14 சமீ.

தஞ்சை வேதநாயக சாஸ்திரி (1774 – 1864) தமிழகத்துப் புலவரும் கவிஞருமாவார். வித்தகக் கவிஞர், விவிலிய அறிஞர், ஞானதீபக் கவிராயர் என்று புகழாரம் சூட்டப்பெற்ற தமிழறிஞர். தஞ்சை தரங்கம்பாடிக் கல்லூரியில் கல்விகற்று, தஞ்சையில் அப்போது கிறித்தவ மத போதகராக இருந்த சுவார்ட்ஸ் பாதிரியாரின் மாணாக்கரில் ஒருவராக இருந்தார். தஞ்சை வேதக் கல்லூரியில் தலைமைப் பொறுப்பை வகித்த பெருமையும் வேதநாயக சாஸ்திரியாருக்கு உண்டு. இவர் இறையியல், வானியல், உடலியல், சமூகவியல் எனப் பல்வேறு அறிவுத்துறைகளிலும் துறைபோகக் கற்றுத் அறிஞராகத் திகழ்ந்தார். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னருக்கு உற்ற நண்பராக விளங்கினார். இவரது 25ம் வயதில் இவர் இயற்றிய ‘பெத்தலகேம் குறவஞ்சி’ என்னும் நாடகம் சென்னை வேப்பேரி கிறித்துவ சபையில் அரங்கேற்றப்பட்டது. ஞானதீபக் கவிராயர் என்னும் சிறப்பினை இவருக்கு அந்த நாடகம் பெற்றுத்தந்தது. இந்நூலில் ஞானத்தாராட்டு, திருச்சபைத் தாராட்டு, பேரின்பக் காதல், பிரலாப ஒப்பாரி, பராபரன் மாலை (முதலாவது பங்கு கலிப்பா 50, இரண்டாவது பங்கு கலித்துறை 110) ஆகிய இவரது நூல்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13516).

ஏனைய பதிவுகள்