மா.காசிநாதப் புலவர்; (மூலம்), அ.சண்முகதாஸ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xxxvi, 226 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9233-75-6.
1875இற்கு முன்னர் கொக்குவில் மா.காசிநாதப் புலவரால் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மீது பாடப்பெற்று கையெழுத்துப் பிரதியாகவிருந்த மாவைப்புராணம் என்ற இந்நூல் 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் அச்சுருவில் வெளியிடப்பட்டுள்ளது. இக்கையெழுத்துப் பிரதியில் கடவுள் வணக்கத்தையும் அவையடக்கத்தையும் நீக்கின் 23 படலங்களும் 1613 விருத்தப் பாக்களும் இருந்துள்ளதாகவும், பதிப்பாசிரியரின் இல்லத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இக்கையெழுத்துப் பிரதி போர்க்காலத்தில் இடம்பெற்ற 1995 இடப்பெயர்வின்போது மழைநீரினால் சிதைவடைந்து 1500 பாடல்களே தப்பிப்பிழைத்திருந்தனவென்றும் குறிப்பிட்டுள்ளார். கடைசிப் படலமாகிய நாகதீர்த்த படலத்தின் 84 பாடல்களும் முற்றாக அழிந்துபோயின. அதற்கு முதற் படலமாகிய 22ஆவது படலமான மணப்படலத்திலும் 29 பாடல்கள் இல்லை. மாவைப் புராணத்தில் சோழ மன்னனின் மகள் மாருதப்புரவீகவல்லி குதிரைமுகத்துடன் இங்கு வந்து நகுல தீர்த்தத்தில் மூழ்கி குதிரை முகம் நீங்கியதும், இதனால் மகிழ்வடைந்த சோழன் மாவைக் கந்தனுக்கு கோயில் கட்டியதும், கண்டி மன்னன் வாலசிங்கனுக்கும் மாருதப்புரவல்லிக்கும் திருமணம் நடைபெற்றதும் இப்புராணத்திலே விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கடவுள் வணக்கம், அவையடக்கப் படலம், நாட்டுப் படலம், நகரப் படலம், நகுலப் படலம், இலங்கை மான்மியப் படலம், யாழ்ப்பாடிப் படலம், வாலசிங்கனுற்பத்திப் படலம், முடிசூட்டுப் படலம், வாலசிங்கன் வேட்டையாடு படலம், யாழ்ப்பாணங் குடியேற்றுப் படலம், மாருதவல்லியுற்பத்திப் படலம், குணாலைய முனிவருபதேசப் படலம், தீர்த்த யாத்திரைப் படலம், நகுலங்காண் படலம், தானஞ்செய் படலம், திருமுகோத்யப் படலம், சோழனெதிர்கொள் படலம், மகிழ்ச்சிப் படலம், திருவாலையோற்படைப் படலம், மணம்பேசு படலம், கதிர்காம யாத்திரைப் படலம், சங்கிலிச் சயிலக் காட்சிப் படலம், கடிமணப் படலம் ஆகிய படலங்களின்கீழ்; பாடல்கள் அமைந்துள்ளன.