வில்லூரான் (இயற்பெயர்: கனகரெத்தினம் முரளிதரன்). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
74 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-4628-48-9.
கிழக்கிலங்கையின் பொத்துவில் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பின் கல்லடி உப்போடையை வதிவிடமாகவும் கொண்டவர் வில்லூரான். பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியரான இவர் சிறந்த மரபுக் கவிஞருமாவார். அறுபது சிறுவர் பாடல்களைக் கொண்ட இத் தொகுப்பு இவரது கன்னிப் படைப்பாகும். இந்நூல் பற்றிய பேராசிரியர் செ.யோகராசாவின் மதிப்புரையில் ‘சிறுவர் பாடல்கள் அடிப்படையில் சிறுவர்களுக்குப் பிடித்தமான பொருள் சார்ந்ததாக வெளிப்படவேண்டும். அவர்களது அனுபவ வட்டத்துக்குள் வந்து சேர்ந்தனவாக இருக்கவேண்டும். இவ்வடிப்படையில் இந்நூலிலும் சிறுவர்களுக்குப் பிடித்தமான பிராணிகள், பறவைகள், மிருகங்கள், பூக்கள், இயற்கைக் காட்சிகள் முதலியன பற்றிய பாடல்களே பெருமளவில் உள்ளன. சில விடயங்களில் ஒன்றிற்கும் மேற்பட்ட பாடல்களும் எழுதப்பட்டுள்ளன. மேற்கூறிய பாடல்கள் சிலவற்றில் அறிவியல் நோக்கு வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது. நுளம்பு பற்றிய முதற்பாடலே அதற்குச் சிறந்த உதாரணமாகின்றது. வாழைமரம் பற்றிய பாடலிலே மருத்துவப் பயன்கள் பல விபரிக்கப்படுகின்றன. இத்தியாதி விடயங்கள் எளிமையான முறையிலே சொல்லப்படுவதற்கு நீராவி சிறந்த உதாரணமாகின்றது. சூழலியல் தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அத்தகைய பல பாடல்கள் இடம்பிடித்துள்ளமையும் பாராட்டிற்குரியது’