கனி விமலநாதன் (இயற்பெயர்: சின்னையா றிட்ஜ்வே விமலநாதன்). கனடா: கனி விமலநாதன், 665, கென்னடி வீதி -108, ரொறன்ரோ, M1K 5E2, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (கனடா: மல்டி ஸ்மார்ட் சொலுஷன், ஒன்ராரியோ).
91 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
செய்யுள் வடிவில் குவாண்டம் விசையியலின் (Quantum Mechanics) பிறப்பு என்பது 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஆரம்பிக்கிறது. அது, ராபர்ட் ஹூக் (Robert Hooke), கிறிஸ்டியன் ஹைஜன்ஸ் (Christian Hygens) மற்றும் லியோனர்ட் ஆய்லர் (Leonard Euler) ஆகிய அறிஞர்கள் ஒளியின் அலைக்கொள்கையை (Wave theory of light) வெளியிட்டதிலிருந்து தொடங்குகிறது. 1803 ல், புகழ் பெற்ற அறிஞர் தாமஸ் யங்க் (Thomas Young), இரட்டை பிளவு ஆய்வினைச் (Double Slit Experiment) செய்து, அதனை On the nature of light and colour என்ற ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டார். இந்த ஆய்வு, ஒளியின் அலைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு, மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குவாண்டம் என்ற சொல் ஒரு இலத்தீன் மொழிச் சொல்லாகும். அதன் பொருள் எவ்வளவு என்ற கேள்வியாகும். குவாண்டம் பொறிமுறையின்படி, இயற்கையின் அடிப்படைக் கூறுகள் தொடர்ந்து பிரிக்கக்கூடியவை அல்ல. உதாரணமாக, ஒளி அலை எனக் கருதப்பட்டாலும் அது ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் பிரிக்கப்பட முடியாதது ஆகும். இது போலவே இடமும் காலமும் கூட ஒரு அளவுக்கு மேல் சிறியதாக்கப்பட முடியாது என்பது குவாண்டம் பொறிமுறையின் துணிபு ஆகும். இந்நூலில் கனி விமலநாதன், சிக்கலான விஞ்ஞான விளக்கமொன்றினை மரபுக்கவிதைகளின் வாயிலாக விளக்கியிருக்கிறார். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவரான கனி விமலநாதன் இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இவர் அங்கு தரப் பரிசோதகராகப் பணியாற்றுகின்றார். 1990இலிருந்து விஞ்ஞானக் கட்டுரைகளையும் அறிவியல் தொடர்களையும் எழுதியவர் இவர். மரபுக் கவிதைகளாலான இந்நூலை இறையருக்கு, அறிமுகம், அறிந்திடச் சில விடயங்கள், பொருட்கள் எவற்றினால் ஆனவை? ஒளிச் செலுத்துகை, தோமஸ் யங் பரிசோதனையும் தெளிவும், மின்காந்தவியலின் தோற்றமும் வளர்ச்சியும், அணுக்கொள்கை உறுதிப்படல், அலைகள், 19ஆம் நூற்றாண்டின் இரு பெரும் புதிர்கள், குவாண்ரம் கொள்கையின் பிறப்பு, ஒளிமின் விளைவு, குவாண்ரம் கருதுகோள், அணு அமைப்பின் வளர்ச்சிப்பாதை குவாண்ரம் பொறிமுறையின் ஆரம்பம், முடிவு ஆகிய 16 பிரிவுகளில் இக்கவிதையாக்கம் இடம்பெற்றுள்ளது.