பூ.முருகேச பண்டிதர் (மூலம்), சு.ஸ்ரீகுமரன், றஜனி நரேந்திரா (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்:பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-7331-13-3.
பூ. முருகேச பண்டிதர் (1830-1898) சுன்னாகத்தில் 1830ல் பிறந்தவர். சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இவரின் மாணாக்கராவார். இவர்கள் இருவருமே பிறரின் இலக்கியப் பிழைகளைக் கண்டு பிடிப்பவர்கள் எனப் பெயர் பெற்ற புலவர்களாவார்கள். சுன்னாகம் முருகேச பண்டிதருக்கு இலக்கிய ஆற்றலுடன் இலக்கணப் பயிற்சியுமிருந்ததால் ‘இலக்கணக் கொட்டர்’ என்றும் அவர் சிறப்பிக்கப்பட்டார். முருகேச பண்டிதருக்கு கவி புனையும் ஆற்றல் இயற்கையாகவே அமைந்திருந்தது. கண்டனக் கவிகள், விநோதச் சிலேடை, நடு வெழுத்தலங்காரம் முதலிய கவிகள் பலவும் பாடியுள்ளார். அவரது படைப்பாக்கங்களில் கைக்கெட்டிய பிரபந்தங்களைத் திரட்டி சுன்னாகம் கு.முத்துக் குமாரசுவாமிப் புலவர் அவர்கள் ‘முருகேச பண்டிதர் பிரபந்தத் திரட்டு’ என்ற நூலை 1956இல் வெளியிட்டிருந்தார். இதில் சந்திரசேகரப் பிள்ளையார் ஊஞ்சல், சிவபூதராயர் ஊஞ்சல், மயிலணிச் சுப்பிரமணியர் ஊஞ்சல், மயிலணி மகாவிஷ்ணு ஊஞ்சல், மயிலணிச் சிலேடை வெண்பா, மயிலணி விசாலாட்சி அம்மை பதிகம், வத்தாக்கை விசாலாட்சியம்மை ஊஞ்சல், குடந்தை வெண்பா, பதார்த்த தீபிகை, நீதிநூறு, தனிச்செய்யுட்கள் ஆகியவையும், பின்னிணைப்பாக முருகேச பண்டிதர் புகழ்மாலை, ஆறுமுகநாவலர் பேரில் முருகேச பண்டிதர் பாடியது, சுன்னாகம் கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை பாடிய முருகேச பண்டிதர் வாழ்த்து என்பன இணைக்கப்பட்டிருந்தன. ‘முருகேச பண்டிதம்” என்ற இப்பதிப்பில் முருகேச பண்டிதர் பிரபந்தத் திரட்டுடன், மேலதிகமாக முருகேச பண்டிதர் பற்றி சி.ரமேஷ் (பன்னுதமிழ் சொன்ன மன்னாகத்தான் சுன்னாகப் பண்டிதன் முருகேசன்), பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை (இலக்கணக் கொட்டர் முருகேச பண்டிதர்), தி.சதாசிவஐயர் (இலக்கணக் கொட்டர்) ஆகியோரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.