அ.விஜயநாதன். அல்வாய்: அம்பலம் விஜயநாதன், ஓய்வுநிலை அதிபர், வல்வை. சிதம்பரக் கல்லூரி, ‘சாரதா’, 1வது பதிப்பு, பங்குனி 2006. (வதிரி: ராஜ் கிராப்பிக்ஸ்).
(4), xii, 22 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
வாழ்த்துச் செய்தி (எஸ்.சத்தியசீலன்), ஒரு தேடலின் அறிமுகக் குறிப்பு (இ.இராஜேஸ்கண்ணன்), ஒரு மனோதரிசன முன்னுரை (கே.தங்கவடிவேல்), வெளியீட்டுரை (இரா.யோகராஜன்), வரகவி க.வே.சி. (அ.விஜயநாதன்), ஆய்வுக் கட்டுரை: 1948ம் ஆண்டுப் பதிப்பு (அமரர் சைவப்புலவர் சி.வல்லிபுரம்) ஆகிய ஆக்கங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. வரகவி க.வே. சின்னப்பிள்ளை வைத்தியர் பற்றிய பல செய்திகளை இந்நூல் நமக்குத் தருகின்றது. 1850களில் வதிரியிலும் அல்வாயிலும் திண்ணைப்பள்ளிக்கூட மரபு இருந்த வரலாற்றை இந்நூல் கோடிட்டுக்காட்டுகின்றது. வதிரியில் வேலுச் சட்டம்பியாரும் அவர் மகன் வைத்தியர் ஆழ்வாரும், அல்வாயில் வேலுச்சோதிடரும் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் வைத்துக் கல்வி புகட்டி வந்தனர். இத்திண்ணைப் பள்ளிக்கூடங்கள் படிப்புடன் நின்று விடாது சமய மரபுகளையும் வழக்காறுகளையும் பேணிவந்தன. தமது மாணவர்களுக்கு சோதிடம், வைத்தியம், தோத்திரங்கள் ஆகியவற்றையும் சட்டம்பிமார் கற்பித்தனர். இதனாலேயே அங்கு மாணவராயிருந்த க.வே.சின்னப்பிள்ளை வைத்தியர் அவர்கள் கவிஞனாகப் பரிணமிக்க முடிந்தது. இதற்கான எழுத்துவழி வந்த ஆதாரங்களையும் நூலாசிரியர் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவ்வகையில் இந்நூல் ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் கல்விவழி வரலாற்று வேர்களைத்தேடிச் சென்று ஆவணமாக்கும் பயனுள்ள பணியைச் செய்துள்ளது. இந்நூல் அமரர் க.வே.சி.அ. துரைச்சாமி அவர்களது ஞாபகார்த்த வெளியீடாகும்.