சி.மௌனகுரு. ராஜகிரிய: விபவி மாற்றுக் கலாசார மையம், 51/7, ராஜாஹேவாவித்தாரண மாவத்தை, ராஜகிரிய வீதி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).
55 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20 x 14.5 சமீ.
பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரா அவர்கள் ஈழத்து நாடக உலகில் முக்கியமான ஓர் ஆளுமை. இந்த ஆளுமையின் தாக்கம் ஈழத்து நாடக உலகை வெகுவாகப் பாதித்துள்ளது. 1960களில் ஈழத்துத் தமிழரின் நாடக மூலமான கூத்தினது மீள்கண்டுபிடிப்பும், அதன் செம்மைப்பாடும் பேராசிரியர் சரச்சந்திராவின் நேரடித் தாக்கத்தின் விளைவுகளாகும். அவரது ஆளுமை மறைமுகமாக 1970களுக்குப் பின் வந்த தமிழ் நாடகத்திற் தீவிர செயற்பாட்டாளர்களாக விளங்கிய இளம் தலைமுறையினரைப் பாதித்தது. ஆய்வறிவாளர் மத்தியில் கலைஞராகவும், கலைஞர் மத்தியில் ஆய்வறிவாளராகவும் விளங்கிய இவர், மனிதர்களுடைய அன்பையும், சௌஜன்யத்தையும், ஒற்றுமையையும் வேண்டிய மிகப்பெரும் மனிதாபிமானி. அவர் பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்கு மிக அவசியம். இந் நூல் அதனைச் செய்துள்ளது. இந்நூல் இரண்டு கட்டுரைகளைக் கொண்டது. ஒன்று பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும் என்ற சி.மௌனகுருவின் கட்டுரை. இரண்டாவது, மறைந்த பேராசிரியர் சரச்சந்திரா அவர்களின் நினைவை யொட்டி இலங்கை வானொலியில் கிழக்குப் பல்கலைக் கழகக் கலைப்பீடாதிபதி யாகப் பணியாற்றிய கலாநிதி சி.மௌனகுருவுடனான ஒரு உரையாடல். இலங்கைத் தேசிய நாடகங்கள் என்ற தொனிப்பொருளில் இவருடன் உரையாடியவர் எஸ்.எழில்வேந்தன். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17106. பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9521)