14103 இந்து தருமம் 2001.

சோ.ரவீந்திரன், பரா.ரதீஸ் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2001. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை). xix, 106+30 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ. வாழ்த்துரைகள், ஆசியுரைகள் மற்றும் மன்ற அறிக்கைகளையும் சமயம் சார்பான கட்டுரைகளையும் இம்மலர் உள்ளடக்குகின்றது. இம்மலரில் வாழ்த்தியல், வாழ்வியல், ஆய்வியல், சமூகவியல், படைப்பியல், பதிவியல் ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் படைப்பாக்கங்கள் பகுத்துத் தரப்பட்டுள்ளன. வாழ்த்தியலில் ஆசியுரைகள், வாழ்த்துரைகள் என்பனவும், வாழ்வியலில் இந்துக்களின் கண்ணோட்டத்தில் பழந்தமிழர் திருமணமும் இன்றைய திருமண நடைமுறைகளும், கிழக்கிலங்கையாம் பாண்டிருப்பின் திப்பள்ளயம், முருக வழிபாடு, ஆலய அமைப்பும் ஆலய வழிபாட்டு முறைகளும் கடவுள் வடிவங்களும் ஆகிய நான்கு கட்டுரைகளும் உள்ளன. ஆய்வியல் என்ற பிரிவில், சோழப் பேரரசின் சதுர்வேதி மங்கலம்-உத்தர பேரூர், நாவலனார் உரைவளம்- கோயிற் புராணத்தை அடிப்படையாகக் கொண்ட தேடல், சமயத் தலைவர்களும் தனித்துவ ஆளுமைகளும், திருமந்திரத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்கள், தேவாரத்தில் காணப்படும் நாட்டியத்தின் மறுபெயர்களும் சிலவகை கூத்துக்களும், இலக்கியக் கண்ணோட்டத்தில் பெண்ணின் பெருமை, மதங்களின் புனிதத்தை உணராயோ மானிடமே, சிந்தனை செய் மனமே, புராணம் உணர்த்தும் உண்மைகள் ஆகிய ஒன்பது ஆக்கங்களும், சமூகவியல் என்ற பிரிவில், இந்து மதத்தின் நற்போதனைகள், இலங்கைக் குடிசன மதிப்பீட்டில் இந்துக்களின் நிலைமை, இன்றைய மனிதனும் இறைபக்தியும், இந்துக்களால் அழியும் இந்து மதம்-சில காரசார குறிப்புகள், ஈழத்தில் சைவத்தின் தோற்றமும் இன்று அதன் நிலையும், எது சரி-எது பிழை? நீங்களே தீர்மானியுங்கள் ஆகியஆறு ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. படைப்பியல் என்ற பிரிவில் மூன்று சிறுகதைகளும், 7 கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. பதிவியல் என்ற பிரிவு செயலாளரின் அறிக்கையைக் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 47723).

ஏனைய பதிவுகள்