இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). xlii, 252 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×14 சமீ., ISDN: 978-955-705-256-4. 17ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரால் அருளப் பெற்ற திருவிளையாடற் புராணத்தில் அமைந்துள்ள சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் எளிமையான உரைநடையில் எவரும் புரிந்துகொள்ளும் வகையில் 64 அத்தியாயங்களில் ஆசிரியர் வடித்துத் தந்திருக்கிறார். மாணவரும் இளவயதினரும் வாசித்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய உரைநடை. பொருத்தமான இடங்களில் திருவிளையாடற் புராணப் பாடல்களையும் சுவைகருதி இணைத்திருக்கிறார். நூ லின் ஆரம்பத்திலேயே மூல ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் பற்றியும், அக்காலத்தைய மதுரை மாநகரின் காட்சியினையும் தனித்தனி இயல்களில் தந்து எம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறார். திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு தன் ஆரம்ப இடைநிலைக் கல்வியை யாழ். இந்து மகளிர் கல்லூரியில் கற்றுத்தேர்ந்தவர். சென்னையில் முதற் பட்டமும், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றவர். 1950களில் அரச கல்வித்துறையில் இணைந்து தனது ஆளுமைத் திறத்தினால் அதிபர் சேவையை அடைந்தவர். யாழ். உயர் தொழில்நுட்பக்கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். இலங்கை வானொலியில் சைவநற்சிந்தனைகள் ஆற்றிவந்த இவர், யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் வெளியீடான ‘யாழ் நாதம்” மலரின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இசைத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர் சிறந்ததொரு வீணைக் கலைஞருமாவார். இலங்கையின் பிரபல வீணைக்கலைஞர் திருமதி ராதை குமாரதாஸ் இவரது மகளாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64659).