14393 பேரும் ஊரும்: இடப்பெயர் ஆய்வு.

ஞா.ஜெகநாதன். வவுனியா: ஞானப்பிரகாசம் ஜெகநாதன், இல. 97, 2ஆம் கட்டை, மன்னார் வீதி, நெளுக்குளம், 1வது பதிப்பு, 2019. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி). ஒii, 245 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ. ISDN: 978-624-95247-0-5. இந்த நூலிலே, வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் இடப்பெயர்களும், வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம் மாவட்டத்தின் தமிழ் இடப்பெயர்களும், வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டத்தின் தமிழ் இடப் பெயர்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இடப்பெயர்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், புத்தளம், அனுராதபுரம் என்னும் ஒழுங்கில் தரப்பட்டுள்ளன. இடப்பெயர்களை நீர்நிலைகள், நில இயல்பு, குடியிருப்பு இடப்பெயர்கள், வேறு இடப்பெயர்கள் என்றவாறாகப் பகுத்துத் தந்திருக்கின்றார். இவை ஊர்ப்பெயராய்வு, ஆட்சி மாற்றங்களும் இடப்பெயர்களும், இடப்பெயர்களின் அடிப்படை, இடப்பெயர்களின் அமைப்புமுறை, இடப்பெயர்கள்- நீர்நிலைகள், இடப்பெயர்கள்- நில இயல்பு, குடியிருப்பு இடப்பெயர்கள், வேறு இடப்பெயர்கள், இடப்பெயர்களும் நமது கடமைகளும், பின்னிணைப்பு ஆகிய பத்து அத்தியாயங்களில் எழுதப் பட்டுள்ளன. குறிப்பாக இந்த நூலில் தமிழ் கிராமங்களின் பண்டைய அல்லது புராதன தமிழர் பெயர்கள் வைக்கப்பட்ட வரலாற்றினை குறிப்பிட்டிருப்பதானது, பல இளம் சமூகத்தினருக்கு எமது கிராமங்களின் வரலாற்றினை அறிவதற்கு இலகுவாக இருக்கும். கலைப்பட்டதாரியான நூலாசிரியர் ஓய்வுநிலைகோட்டக்கல்விப் பணிப்பாளராவார். சமாதான நீதவானாகவும், வவுனியா மத்தியஸ்த சபை உறுப்பினராகவும், வவுனியா கலாச்சார அதிகார சபையின் உபதலைவராகவும் சமூகப் பணியாற்றியவர். முன்னதாக 2013இல் நாகர் எழு வன்னி என்ற ஆய்வுநூலை எழுதியவர். எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், யாழ் இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்

ஏனைய பதிவுகள்