14673 இலங்கைக் காவியம்: முதற்றொகுதி: பருவப் பாலியர் படும் பாடு.

க.சச்சிதானந்தன். காங்கேசன்துறை: க.சச்சிதானந்தன், மாவிட்டபுரம், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: நவயோக அச்சகம்). xxiv , 608 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14.5 சமீ. இளம் வயதினரின் செயல்களை சித்திரிக்கும் இக்காவியம், 4300 கவிதைகளில் விரிந்துள்ளது. 1958ஆம் ஆண்டு முதலான இனக்கலவரங்களை இக்காவியத்தின் கருப்பொருளாகக் காணலாம். இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் பாலியப் புயற் பருவம், சூறாவளிப் பயணமாயிற்று. பாதுகாப்பின்மை, பஞ்சம், பட்டினி, கண்ணீர், நிச்சயமற்ற தன்மை, இரத்தம், பிணம், பயங்கரம், மனித உயிரின் மலிவு, துப்பாக்கிக் கலாச்சாரம், சட்ட வாழ்க்கைக் குலைவு, இடம்பெயர்வு, என்பன தமிழ்ப் பகுதிகளின் அரசியல் சமூக மண்டலம் (Social Political Millieu) ஆயிற்று. இம்மண்டலத்தில் தமிழ்ப் பாலியரின் உள்ளம் எவ்வாறு அலைவுற்றது என்பதே இக்காவியத்தின் கருவாகும். காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் சச்சிதானந்தன் (10.10.1921-21.03.2008). ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான இவர் சச்சிதானந்த என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதிவந்துள்ளார். மகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்ற இவர், காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரி (1938-1940) ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். தந்தையாரிடம் வானியலும் சோதிடமும் சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக் குருக்களிடமும் சமஸ்கிருதக் கல்வியும் பயின்றார். மதுரைத் தமிழ்ப் பண்டிதர் பட்டமும் பெற்றார். 1971 ஆம் ஆண்டில் லண்டனில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடையவர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது.

ஏனைய பதிவுகள்