பா.பாலேஸ்வரி (இயற்பெயர்: செல்வி பாலேஸ்வரி பாலசுப்பிரமணியம்). திருக்கோணமலை: திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 471, திருஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1966. (மட்டக்களப்பு: ராஜன் அச்சகம், 25, முனைத்தெரு). 154 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 2.50, அளவு: 18×13 சமீ. செல்வி பா.பாலேஸ்வரி (பின்னாளில் திருமதி பாலேஸ்வரி நல்லரத்தினசிங்கம்) வீரகேசரி வாரவெளியீட்டில் 1965இல் தொடராக எழுதிவந்த தொடர்கதையின் நூல்வடிவம் இது. இது அவரது முதலாவது நாவலாகும். திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இதனைத் தமது இரண்டாவது வெளியீடாக வெளியிட்டுள்ளது. பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்யவரும் ஆண்களைப் பெண்கள் ஏற்கலாகாது என்ற கருத்தை 20ம் நூற்றாண்டு நடுப்பகுதியின் ஈழத்து நடுத்தரவர்க்கப் பின்னணியில் நின்று கதாமாந்தர்களின் வாயிலாக வலியுறுத்துகின்றார். டாக்டர் சுமதி, டாக்டர் சங்கருடன் நெருங்கிப் பழகுகின்றாள். இது காதலாக மலர்கின்றது. சுமதியின் இலட்சியமும், பெற்றோரின் நோக்கமும் காதலைத் தடுக்க-அதனால் ஏற்படும் மனப்போராட்டம், இறுதியில் அவர்களின் இணைவு என்பன கதையை நகர்த்துகின்றன. அன்பெனும் அருமருந்து, உதயம் கண்ட தாமரை, கவ்விக்கொண்ட ஜோடிக்கண்கள், அவளை அறியா அன்பு மனம், துணிந்தபின் பயமெதற்கு, என் எதிர்கால மனைவி நீ, என்னுயிராய் நீயிருந்தாய், இரு சொட்டுக் கண்ணீர், தொண்டு செய்யும் தேவதைப் பெண், விடு அவன் போகட்டும், இறுகப் பற்றிய இன்பக் கரங்கள், எனக்கும் ஒரு இதயம் உண்டு, வெந்த புண்ணில் பாய்ந்த கூர் நெடும் வேல், இவள் வேண்டாம் அவள் போதும், அத்தான் இட்ட தயிர்க்கட்டி, கைவளை தந்த இரத்தக் கறை, வந்த விருந்து வறிதே திரும்புவதோ, தூது நீ சென்று வாராய், தூக்கி வளர்த்த கை சும்மா இருக்குமா?, நானென்னும் நிலைகெட்டு நாமாகும் தனிவாழ்வு, ஒட்டாது ஒருபோதும் வெட்டிவிட வேண்டுமையா, எல்லோரும் கூடி எதை முடிக்க நினைத்தனரோ?, சேர்ந்து நின்ற சிறப்பான ஜோடிகள் ஆகிய 24 அத்தியாயங்களில் இச் சமூகநாவல் விரிந்துள்ளது.