மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புதராணி காசிலிங்கம்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 142 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0958-12-2. மலரன்னையின் நூலுருப்பெறும் மூன்றாவது நாவல் இது. பலவித இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மலையக மக்கள் எவ்வித சிரத்தையுமில்லாமல் இதுதான் எமக்கு எழுதப்பட்ட வாழ்க்கையின் நியதி எனக்கொண்டு காலத்தைக் கழிக்கின்றார்கள். இருப்பினும் அவர்களுக்கிடையே இலைமறை காய்களாக துளிர்த்திருக்கும் சிலர் உணர்வுகளின் உந்துதலால் எழுச்சி பெற்று கடின முயற்சியினால் தமது வாழ்க்கையில் முன்னேறி தமது இனத்திற்கே ஒரு வழிகாட்டியாக மாறுகின்றனர். அத்தகைய ஒரு கதாபாத்திரமாக இந்நாவலில் சரஸ்வதி வருகிறாள். மலைச்சாரலில் துளிர்த்த ஒரு இளம் தளிர் தன் இனத்தவர் படும் அவலங்களைக் கண்டு வேதனை அடைகிறாள். ஏழைத் தொழிலாளர்களிடமும் திறமையிருக்கிறது. அத்திறமை தட்டியெழுப்பப்பட வேண்டும். சமூகத்தில் மேம்பட்ட வாழ்க்கையை அவர்களாலும் வாழமுடியும். அதற்கு மன ஓர்மமும், கடின உழைப்புமே தனி வழி என்பதை நிரூபித்து சாதனைப் பெண்ணாகும் சரஸ்வதியின் கதையே இந்நாவலாகும். நாடறிந்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம் அவர்களின் புதல்வியே மலரன்னை. மறையாத சூரியன் (நாவல், 2010), வேர் பதிக்கும் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி, 2015), கீறல் (சிறுகதைத் தொகுதி, 2016), மௌனத்தின் சிறகுகள் (நாவல், 2017), அனலிடைப் புழு (சிறுகதைத் தொகுதி, 2017) ஆகிய நூல்களை எமக்களித்தவர் மலரன்னை. ஈழ விடுதலைப் போராளியும் படைப்பாளியுமான மலரவனின் அன்னை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 96ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.