தெணியான். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 216 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-9275-5. இந்நாவல் பேசும் மூவுலகு என்பது சாமானியர்களின் மேலுலகு, பூவுலகு, பாதாளவுலகு (நரகம்) ஆகிய மூன்றுமல்ல. இந்தப் பூவுலகிலுள்ள மூன்று வர்க்கங்கள் பற்றியதே இந்நாவலின் பேசுபொருள். வர்க்கம் சார்ந்த இந்நாவல் அந்த வர்க்க அரசியலுடன் வர்க்கங்களிடையே உருவாகும் காதல், அதனை மீறிய சாதி, அதன் முடிவுகள் என்பவற்றைப் பேசுகின்றது. அத்தோடு இன ஐக்கியத்தின் மேன்மையையும் இந்நாவல் காட்டிநிற்கின்றது. மூன்று இளம் சோடிகளின் கதைகளைப் பேசும் இந்நாவலில் இரண்டு காதல் கதைகள் குறிப்பிடத்தக்கவை. முதலாவதும் பிரதான கதையுமானது மாணவப் பருவத்தில் கிளர்ந்தெழுந்து பல்கலைக்கழகம் தாண்டி, இடர்களுக்கு முகம் கொடுத்து மருத்துவர்களான பின்னரும் தொடரும் காதல். குமரன் வாணி ஆகியோரின் காதல் ஆழமான காதல். ஒருவரை ஒருவர் புரிந்து ஒருவர் ஆற்றலை மற்றவர் கண்டு வியந்து, ஒத்த மனம் கொண்டோரிடையே பிறந்த காதல் அது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல ரியூசன் வகுப்பில் ஆரம்பித்து பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மருத்துவர்களாக பணியேற்ற பின்னரும் தொடரும் காதல். வெளிக் கவர்ச்சிகளால் பிறந்தது அல்ல. ஆழமான அர்ப்பணிப்புடன் கூடிய உண்மையான காதல். தடைகளை மௌனமாக எதிர்கொண்டு மேவிச் செல்லும் காதல். ஆயினும் சமூகச் சூழல் பெரும் திரையாக விலக்கி வைக்க முனைகிறது. இரண்டாவது காதல் கதை இரு பாடசாலை ஆசிரியர்களிடையே எழும் காதல் பற்றியது. தனிமையின் வெற்றிடத்தை நிரப்பவும், பாலியல் உணர்வுகளால் உந்தப்பட்டும் எழுகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைக் காதல் அது. இங்கு ஆத்மார்த்த ஈடுபாடு சந்தேகத்திற்கு உரியது. காதலே இல்லாமல் காலத்தின் கோலத்தால் இளம் பாராயத் திருமணத்திற்கு தள்ளப்பட்ட சமூகத்தின் அடித்தள மக்களின் கதை மூன்றாவது. கடுமையான யுத்த காலப் பகுதியில் வலுக் கட்டாயமாக போராளியாக இழுத்துச் செல்லப்படுவதிலிருந்து தப்புவதற்காக செய்யப்படும் நிர்ப்பந்தத் திருமணம். இந்த மூன்று கதைகளையும் இணைத்து மூவுலகு நாவலை சுவையாகப் புனைந்ததில் தெணியானின் அனுபவப்பட்ட எழுத்தாளுமை கைகொடுக்கிறது. இது காதல் பற்றிய நாவலாகவே இருக்கிறதே ஒழிய காதல் நாவல் அல்ல.