14888 யாழ் மீட்டிய கண்கள் (பயணக் கட்டுரை).

ராஜகவி ராகில். தமிழ்நாடு: அகநாழிகை பதிப்பகம், 26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு 603001, 1வது பதிப்பு, ஜுன் 2016. (சென்னை 600 005: கணபதி என்டர்பிரைசஸ்) 140 பக்கம், விலை: ரூபா 140., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-93-84921-12-5. யாழ்ப்பாணத்தை நோக்கிய ராஜகவி ராகிலின் வழித்தடப் பயணத்தின் மூலம் இதுவரையும் நாம் பார்க்கத் தவறிய காட்சிகளை எம்கண்முன் காட்சிப்படுத்தும் பணியைச் செய்திருக்கிறார். கலை, கலாசாரம், இயற்கை வளம் நிறைந்த மண்ணில் ஏன் போர்வாடை வீசியது? அந்த வாடைக்காற்றால் இன்று வலிசுமப்போர் எத்தனை பேர்? போன்ற எண்ணங்களை இவருடைய அனுபவங்கள் பேசுகின்றன. மேலும் யாழ் மண்ணின் பாரம்பரியங்களையும் மன்னர்கால நினைவுச் சின்னங்களையும் இப்பயணத்தின் மூலம் ஞாபகப்படுத்தியிருக்கிறார். ஒரு பயணக்கதை போர் வலியைச் சுமந்து வந்திருக்கிறது. எழுத்தாளர் மணிமேகலையின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவுக்காக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய தன் குடும்ப உறவுகளுடனான மகிழுந்துப் பயணமும், அப்பயணத்தின் போது யாழ் மண்ணின் மாண்புகளையும், அம்மண்ணின் பெருமைகளையும், அது சுமந்துநிற்கும் துயரங்களையும் வலிகளையும் கவிஞர் ஆங்காங்கே பதிவுசெய்கின்றார். இது கவிதைநடையில் எழுதப்பட்ட ஒரு பயணத்தொடர். கிழக்கிலங்கையின் நிந்தவூர் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ராகில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 12 கவிதை நூல்களையும், சிறுகதைத் தொகுதி ஒன்றையும் மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு என்ற நாவலையும் வெளியிட்டுள்ள இவரது முதலாவது பயண இலக்கியம் இதுவாகும். ஆசிரியர் தற்போது சீசெல்ஸ் நாட்டில் வசித்துவருகிறார்.

ஏனைய பதிவுகள்