14925 நீண்ட காத்திருப்பு.

கொமடோர் அஜித் போயகொட, சுனிலா கலப்பதி (ஆங்கில மூலம்), தேவா (தமிழாக்கம்). சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 208 பக்கம், விலை: இந்திய ரூபா 220., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-1-7752 392-7-7. கொமடோர் அஜித் போயகொட பணி ஓய்வு பெற்ற ஒரு கடற்படை அதிகாரி. 1974 முதல் 2004 வரை இவர் கடற்படையில் பணியாற்றினார். 1994இல் விடுதலைப் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு 2002இல் விடுதலையான இவர் தனது அனுபவங்களை விரிவாகப் பேசும் முதல் நூல் இது. கொமடோர் அஜித் போயகொட சொல்லக் கேட்டு சுனிலா கலப்பதி என்ற அரங்கியலாளர் A Long Watch என்ற பெயரில் எழுதிய இப்பிரதி, தேவாவினால் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. நவீன ஹிட்லர்களின் கீழ்- அடக்குமுறையாளர்களின் கீழ் இராணுவ ஆட்சிகளில் கூட-ஆளும் வர்க்கத்துடன் மௌனமாய் உடன்பட்டவர்களாலோ தத்தம் வேலையைப் பார்த்தவண்ணம் கடந்து செல்பவர்களாலோ அன்றி-தமது வரையறைகளுக்குள்ளும் தமக்கு நியாயமெனப் பட்டதை செய்பவர்களாலேயே மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. அரச இயந்திரத்தால் அனுமதிக்கப்பட்ட கலவரங்களின் கீழ் அயலவர்-அந்நியர் உதவிகளுடன் தப்பியவர்களிடமிருந்து அத்தகைய பல கதைகள் எம்மிடமும் உண்டு. கொமடோர் அஜித் போயாகொடவின் நூலின் மையக்கூறும் அது தான். போரில் தனிமனிதர்களின் பங்கு என்ன என்பது நூலினது ஆதார வினாவாக அவரது பணிவாழ்வின், சிறைவாழ்வின் அனுபவங்கள் ஊடாக விரிகிறது. பலாலித்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் படையினரிடம் அகப்பட்ட போராளி கெனடியை மீட்பதற்காக, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டவர் “சாகரவர்த்தனா” கப்பல் கப்டன் அஜித் போயகொட. 1994 ஆம் ஆண்டு மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகள் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் பிடிக்கப்பட்ட இவர், ஏழு வருடங்களின் பின்னர் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்டவர். கடலில் வைத்து கைதுசெய்யப்பட்ட அஜித் போயகொட புலிகளுடன் இணைந்து செயற்படுகிறார் என்று சிங்களபடைத்தரப்பில் மாத்திரமல்லாது ஊடகங்களின் வாயிலாக மக்கள் மத்தியிலும் பிரச்சாரப்படுத்தப்பட்டு உண்மையாக்கப்பட்டிருந்த நிலையில், ஏழு வருடங்களின் பின்னர் தென்னிலங்கை திரும்பும் அஜித் முகங்கொடுக்கின்ற மிகப்பெரிய மன உளைச்சலின் விளைவாகவே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. மாலுமிகள் நித்திரைகொண்டிருந்தபோது கடற்புலிகள் தாக்கி மூழ்கடித்த கப்பலில் இருந்து பாய்ந்து, கடலில் மிதந்துகொண்டிருந்த தன்னை பிடித்துக்கொண்டு கரைக்கு கொண்டுபோனபோது, சூசை வந்து அடையாளம் காணுவதிலிருந்து – கிளாலி வழியாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு கொக்குவில், மானிப்பாய், நல்லூர், மிருசுவில், வன்னி என்று 94 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை – புலிகள் இராணுவ ரீதியாக எழுச்சிகொண்டுவந்த முழுக்காலப்பகுதியிலும் – அவர்களோடு ஒரு கைதியாக பயணிக்கிறார் அஜித் போயகொட. தான் கைதுசெய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் அனுபவித்த உண்மைகளை இயன்றளவு மறைக்காமல் எழுதியிருப்பது இந்த நூலுக்கு ஒரு பெறுமதியை கொடுக்கிறது.

ஏனைய பதிவுகள்