ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 24 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4676-81-7. யாழ்ப்பாணத்தில் உள்ள கரம்பனில் பிறந்த தனிநாயகம் அடிகளார் தனது ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலும், கொழும்பில் சென்ட் பேர்னாட் செமினறியில் தத்துவவியலில் கலைமாணிப் பட்டத்தையும் (1934), தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் M.Litt பட்டத்தையும் பின்னர் லண்டனில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். 1961 இல் மலேசியா சென்று மலாயா பல்கலைக்கழகத்தில் 1969 வரை இந்திய ஆய்வியல்துறையிலே தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் ஓராண்டு காலம் பாரிசில் பிரான்சுக் கல்லூரியிலும், ஓராண்டு காலம் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார். கத்தோலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் தமிழை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும், பரப்பும் தூதராகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. Tamil Culture (தமிழ்க் கல்ச்சர்) என்ற ஆங்கில காலாண்டிதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். அதன் மூலம் உலகெங்குமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்று சேர்க்க முற்பட்டு பெரும் வெற்றியும் கண்டார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். மலேசியாவில் பணிபுரியும் காலத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நிறுவுநர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். அதன் முதல் மாநாட்டினை 1966, ஏப்ரல் 16-23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்து நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்ற தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார். பல்கலைக்கழக தமிழ் ஆளுமைகள் தொடரில் நான்காவது நூ லாக வெளிவந்துள்ள இப்பிரசுரம், ஜீவநதி வெளியீட்டகத்தின் 107ஆவது பிரசுரமுமாகும்.