கந்தையா பேரம்பலம். மிருசுவில்: க.பேரம்பலம், சிவபுரி, உசன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (நவாலி: ஐங்கர் கிராப்பிக்ஸ்). ஒடii, 137 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ. முன்னைநாள் உசன் இராமநாதன் மகாவித்தியாலய அதிபரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான இந்நூலாசிரியர் முகமாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் வாழிடமான உசன் கிராமத்தின் வரலாற்றையும், உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தின் வரலாற்றையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளார். தொன்மையான வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கிராமத்தின் அமைவிடம், வரைபடம், ஆதிக்குடிகள், இடப்பெயர் ஆய்வு, என்பன போன்ற தகவல்களுடன் வர்ண, கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. உசன் கிராம கீதம் (சிற்பி), உசன் கந்தசுவாமி கோவில் முத்துக் குமாரசுவாமி பேரில் பாடப்பெற்ற திருப்பள்ளி எழுச்சி, வெளிநாடுகளில் வசிக்கும் உசன் வாழ் மக்கள் இவ்வூரின் அபிவிருத்திப் பணிகளுக்குச் செய்யும் சேவைகள், பாடசாலைக் கீதம் (சிற்பி), பாடசாலை அதிபர்கள் உபஅதிபர்கள் ஆசிரியர்களின் சேவை விபரம், பாடசாலையின் பரீட்சைகளின் அடைவு மட்டமும் (பரீட்சைப்பெறு பேறுகள்) அதன் மூலம் இங்கு கல்வி கற்றவர்கள் பெற்ற தொழில் வாய்ப்புக்களும், சைவ வித்தியாவிருத்திச் சங்கம் கட்டிய பாடசாலைகள் விபரம் ஆகிய தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15038).