பரதராஜ முனிவர் (மூலம்), பால.சுகுமார் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2021, 1வது பதிப்பு, ஜனவரி 1970. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
xx, (2), 110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
பரம்பரை பரம்பரையாக வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் வீட்டில் விளக்கு வைத்து கஞ்சன் அம்மானை ஏடு படித்து பத்தாம் நாள் பொங்கி மடை வைத்து கொண்டாடுவது ஒரு மரபாக இன்று வரை நீள்கிறது. கஞ்சன் என இந்த நூலில் குறிப்பிடுவது “கம்சன்” என்ற புராணப் பெயராகும். கிராம வழக்காற்றில் அப்பெயர் கஞ்சனாக உரு மாறியிருக்கிறது. ஏடு படித்து பொங்கும் இம் மரபு மட்டக்களப்பிலும் பல வீடுகளில் காணப்படுகிறது. கஞ்சன் அம்மானை படிப்பு மட்டக்களப்பு கிருஷ்ணர் கோயில்களில் ஆண்டு தோறும் திருவிழாக் காலங்களில் படித்து கிருஷ்ணர் பிறப்பை நிகழ்த்திக் காட்டும் ஒரு இலக்கிய நிகழ்த்துகையாக ஒரு பண்பாட்டு தொடர்ச்சி காணப்படுகிறது. பால.சுகுமார் பதிப்பித்த இந்நூல் இரண்டாம் பதிப்பென உள்ளே குறிப்பிடப்படுகின்றது. அவர் முதற்பதிப்பாக, நீதியரசர் பொன். ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் துணைவியார் திருமதி கண்மணி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் நினைவு வெளியீடாக, பேராசிரியர் சு.வித்தியானந்தன், திமிலதீவு மகாவிஷ்ணு கோவிலிலிருந்து பெறப்பட்ட மூல ஏட்டினை ஜனவரி 1970இல் கண்டி ரோயல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்ட பதிப்பையே குறிப்பிடுகின்றார். ஆனால் கொழும்பில் செட்டியார் தெரு 175ஆம் இலக்கத்தில் இயங்கிய கலாநிலையத்தின் அதிபர் சி.பத்மநாப ஐயர், தாமும் மட்டக்களப்புப் பெரும்புலவராகவிருந்த பரதராஜ முனிவர் இயற்றிய இந்நூலின் ஏட்டுப் பிரதியிலிருந்து படியெடுத்து, கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரிண்டர்ஸ் இல் அச்சிடப்பட்டுள்ளதாக 88 பக்கத்தில் ஒரு பதிப்பு ஆண்டு விபரமின்றிக் காணக்கிடைக்கின்றது. அந்நாட்களில் ரூபா 1.50இற்கு இந்நூல் விற்கப்பட்டுமுள்ளது.