க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-86-2.
1968 இல் பிறந்து 2018 இல் மறைந்துவிட்ட கெக்கிறாவ ஸஹானா, குறுகிய காலத்தில் ஈழத்து இலக்கிய வானில் சுடர்விட்டுப் பிரகாசித்த இலக்கிய நட்சத்திரம். அனுராதபுர மாவட்டத்திலிருந்து மணம்பரப்பிய படைப்பாளி இவர். 1989 ஓகஸ்ட் மாத மல்லிகையில் ‘ஊரடங்கு’ என்ற கவிதையுடன் அறிமுகமான ஸஹானா, அதே ஆண்டு ஒக்டோபர் மல்லிகை இதழில் ‘உள்ளிருக்கையில்’ என்ற சிறுகதையை எழுதி சிறுகதை எழுத்தாளராகவும் ஈழத்து இலக்கிய வட்டாரத்தில் அறியப்பட்டவர். இந்நூல், கெக்கிறாவ ஸஹானா குறித்த மனப்பதிவுகளாகவும் மலரும் நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் அமைந்த பத்துக் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. ஈழத்து இலக்கிய உலகில் வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்த இலக்கிய தேவதை கெக்கிறாவ ஸஹானாவின் இலக்கியத் தடம் (க.பரணீதரன்), பாதியில் முடிந்த பயணம் (ஸய்யத் முஹம்மத் பாருக்), ஒரு தேவதைக் கனவை இலக்கியத்தில் பதிவுசெய்து அற்பாயுளில் மறைந்த இலக்கிய தேவதை கெக்கிறாவ ஸஹானா (முருகபூபதி), என்றும் உயிர்வாழும் இராகம் (அன்பு ஜவஹர்ஷா), குறையாத வியப்பைத் தந்து விரைவாக மறைந்த நேசம் கெக்கிறாவ ஸஹானா (மேமன்கவி), சஹானா எனும் ராகத்திற்காக மல்வானையிலிருந்து ஒரு மடல் (நாச்சியாதீவு பர்வீன்), பாரதி கண்ணம்மா அவள் எனக்கு (கெக்கிறாவ ஸுலைஹா), கெக்கிறாவ ஸஹானாவும் நானும் (பாத்திமா மைந்தன்), சிறகடித்த சிட்டுக்குருவி (திக்குவல்லை கமால்), Loss of a Jahanara (ஜஹனாரா பார்வின்) ஆகிய ஆக்கங்களை இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது. ஜீவநதியின் 112ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கும் நூல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65208).