பாக்கியநாதன் நிரோஷன். கொழும்பு: நாடகப் பள்ளி வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xii, 128 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-624-5881-12-3.
நாடகப் பள்ளி வெளியிடுகின்ற ஈழத்தின் மூத்த அரங்கியல் கலைஞர்களின் அனுபவங்களைப் பதிவு செய்கின்ற நூலாக்கம் இது. இந்நூலின் மேலட்டையில் ‘அரங்க ஆளுமைகள் நால்வர்: நாடகப் பள்ளி நடத்திய மெய்நிகர் கருத்தரங்க அனுபவப் பகிர்வு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நால்வராக க.பாலேந்திரா, மாவை. மு.நித்தியானந்தன், இளைய பத்மநாதன், அருட்கலாநிதி நீ.மரியசேவியர் ஆகியோரை அடையாளப்படுத்தியுள்ளார். மேலும் அ.தாசீசியஸ், க.பாலேந்திரா, மாவை. மு.நித்தியானந்தன், இளைய பத்மநாதன், சி.மௌனகுரு உள்ளிட்ட பல ஆளுமைகள் இக்கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர். காத்திரமான தமிழ் நாடகங்களை மேடையேற்றுவதற்காகவும் அரங்கியல் செயற்பாடுகள் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் அனைத்து அரங்கியலாளர்களுக்கும் சென்றடைய வேண்டும், அரங்கியல் ஆவணங்கள் பேணப்படவேண்டும் போன்ற உயர்ந்த நோக்கங்களின் அடிப்படையில், ‘கல்வியுடன் கலைப்பணி” எனும் மகுட வாக்கியத்துடன் ‘நாடகப்பள்ளி’ (School of theatre) கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் பாக்கியநாதன் நிரோஷனால் 18.10.2016 அன்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. நாடகப் பணியாற்றிய தமிழ் நாடக ஆளுமைகளை ஆவணப்படுத்தி, ‘ஈழத்து தமிழ் நாடக ஆளுமைகள்’ எனும் நூலும், நாடகப்பள்ளி நடத்திய சர்வதேச அரங்கியல் கருத்தரங்க உரையாடலும் தொகுக்கப்பட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.