P.சத்தியசீலன். யாழ்ப்பாணம்: திருமதி கலாதேவி, கலைவண்ணம், சின்னப்பா வீதி, நவாலி தெற்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, ஜீன் 1976. (யாழ்ப்பாணம்;: கவின் அச்சகம், நாவலர் வீதி).
56 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
தனித்துவமானதோர் எழுத்துப் பாணியின் மூலமும், நேர்த்தியான நூலாக்கங்களின் மூலமும் ஈழத்துச் சிறுவர் இலக்கியத்தில் தனியிடம் பெற்றவர் பாவலவன் பா.சத்தியசீலன். பாட்டுக்கூத்து என்ற இந்நூலில் பள்ளிச் சிறுவர் பாடி ஆடி மகிழக்கூடிய வண்ணம் யாத்த சிறுவர் பாநாடகங்களை தொகுத்திருக்கிறார். சிறுவர் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் தமிழ்ப் பரிசு (1967), பாட்டு (1970) ஆகிய இவரது இரண்டு நூல்களைத் தொடர்ந்து மூன்றாவதாக இந்நூல் வெளிவந்துள்ளது. ‘கண்மணி” என்ற பாப்பாப் பாமலர் இந்நூலின் முன்னீடாக அமைகின்றது. இதில் விடுகதைப் பாணியில் அமைந்த விலங்குத் தோழன், நம்பியும் அணிலும், வண்ணத்துப் பூச்சி, நிலவே, பூக்குட்டி, பந்து, தவளை ஆகிய தலைப்புகளில் அமைந்த சிறுவர் பாடல்கள் இடம்பெறுகின்றன. தொடர்ந்து, பஞ்சதந்திரக் கதையை கருமையப்படுத்தி புனைந்த பா இசை நாடகமாக “புத்திமான் பலவான்” முதலாவதாக இடம்பெற்றுள்ளது. ரஷ்ய இதழ்த் துணுக்கொன்றின் பாதிப்பில் முகிழ்ந்த “உயிர் காத்த ஓவியம்” பா இசை நாடகம் இரண்டாவதாக இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வரும் “கொடை” என்ற பா இசை நாடகத்தில் தேரில் வந்து கொடுத்த பாரியையும் காரில் வந்து கொடுத்த கண்ணனையும் இணைத்துத் தருகிறார். தொடர்ந்து, “நல்ல கணக்கு”, “பிழை திருத்தம்” ஆகிய பா நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. ‘பிழை திருத்தம்” கத்தோலிக்கரின் பரிசுத்த நற்செய்தியிலே வரும் ஊதாரிப்பிள்ளை (கெட்ட குமாரன்) கதையைக் கருவாகக் கொண்டமைக்கப்பட்ட பா நாடகமாகும்.