வில்லிபுத்தூராழ்வார் (மூலம்), ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: தா.க.சு., மேலைப் புலோலி, 1வது பதிப்பு, ஜனவரி 1930. (பருத்தித்துறை: ஸ்ரீ.திருஞானசம்பந்தபிள்ளை, கலாநிதி யந்திரசாலை).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
வில்லிபாரதம் ஆதிபருவத்துள்ள இவ்வாரணாவதச் சருக்கம் 1930ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் சீனியர் சேர்ட்டிவிக்கற் வகுப்புத் தமிழ்ப் பாடங்களுள் ஒன்றாக நியமிக்கப்பெற்றுள்ளது. வில்லிபாரதத்தின் வாரணாவதச் சருக்கம் பீமன் பாதாளஞ்சென்று மீண்டது, துரோணன் குருவானது, அரசகுமாரர்கள் துரோணரிடம் பயின்று சிறப்புறுதல், கர்ணன் அங்க நாட்டிற்கு அரசனானது, துரோணனின் சபதம் நிறைவேறுதல், திட்டத்துய்ம்நன், திரௌபதி ஆகியோரின் பிறப்பு, யுதிஷ்டிரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியது, பாண்டவர்கள் வாரணாவதத்தில் அரசு வீற்றிருத்தல், அரக்கு மாளிகை எரிய அதனின்றும் பாண்டவர்கள் தப்பியது எனப் பாடங்களை உள்ளடக்கியது. இச் சருக்கத்திற்கு வித்துவசிரோன்மணி ஸ்ரீமத் ந.ச.பொன்னம்பல பிள்ளையவர்கள் செய்த அரிய உரையை ஆதாரமாகக் கொண்டு பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் சந்திகளைப் பிரித்தும் கடினமான பதங்களுக்குப் பதிலாக இலகுவான சொற்களைப் பிரதியீடு செய்தும் ஒரு உரை எழுதி, அதனை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்ப் போதகாசிரியரும் இந்து சாதனப் பத்திரிகையாசிரியருமாகிய ஸ்ரீ.ம.வே. திருஞானசம்பந்த பிள்ளையைக் கொண்டு பரிசோதிப்பித்து வெளியிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0316).