தீவகம் வே.இராசலிங்கம். கனடா: பாரதி வயல் பதிப்பகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (கனடா: ஜே.ஜே.பிரின்டர்ஸ், ஸ்கார்பரோ).
106 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
தீவகம் வேலாயுதர் இராசலிங்கம் (பிறந்த தினம் 21.02.1947) தீவகத்தின் சரவணை கிழக்கு, வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது இக்கவிதை நூல் வித்தியாசமான ஒன்றாகும். ஈழத்தமிழரின் விடுதலை வரலாற்று நிகழ்வுகளுடன் ஆண்டுதோறும் வரும் தனது அகவையையும் இணைத்து 1947 முதல் 2015 வரையிலான ஒவ்வொரு பிறந்தநாளையொட்டியும் அவ்வாண்டுக்குரிய அரசியல் குறிப்புகளையும் தேடிச் சேர்த்து ஒரு கவிதை மாலையாகப் படைத்துள்ளார். அகவை 01-ஆயிரத்துத் தொழாயிரத்து நாற்பத்தேழு, மாசி -21 என்ற தலைப்பில் முதல் கவிதை வெண்செந்துறை பாவடிவில் எழுதப்படுகின்றது. அகவைப்பா 02- சுதந்திரம் செப்பிய நாற்பத்தெட்டு மாசி 4, நிலைமண்டில ஆசிரியப்பா வகையில் எழுதப்படுகின்றது. அகவைப்பா 03- வாக்குப் பறித்த நாற்பத்தொன்பதாம் ஆண்டு, அகவைப் பா 04-1950: தேசியக் கொடியும் தேசிய கீதமும், அகவைப்பா 05-1951: ஜீ.ஜீ அவர்களும் தேசியக் கொடியும், அகவைப்பா 06- 1952: பிதா சேனநாயக்கா மறைவு என்றவாறாக தொடர்கின்றது இவரது அகவைப் பா மாலை. இறுதிப் பாவாக ‘அகவைப்பா 69- கடன் கேட்ட மூன்றாம் வருடம் 2015: அன்பு வேலவா இன்பம் தாராய்” என்ற தலைப்பில் வண்ணப்பா-திருப்புகழ் பாவடிவில் எழுதப்பட்டுள்ளது.